போலீசார் தாக்கியதில் 17 வயது வாலிபர் இறந்தாரா? ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையிலான குழு விசாரிக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


போலீசார் தாக்கியதில் 17 வயது வாலிபர் இறந்தாரா? ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையிலான குழு விசாரிக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 27 March 2019 4:45 AM IST (Updated: 27 March 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

போலீசார் தாக்கியதில் 17 வயது வாலிபர் இறந்ததாக தொடரப்பட்ட வழக்கு குறித்து ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையிலான குழு விசாரிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

மதுரை கோச்சடையை சேர்ந்த ஜெயா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

எனக்கு முத்துகார்த்திக் (வயது 17), முத்துப்பாண்டி (15) என 2 மகன்கள். மூத்த மகன் முத்துகார்த்திக், எஸ்.எஸ்.எல்.சி. படித்துவிட்டு, பொக்லைன் எந்திர நிறுவனத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் எங்கள் பகுதியில் உள்ள வீட்டில் நகை திருட்டு போனது குறித்து விசாரிக்க முத்துகார்த்திக் உள்பட பலரை எஸ்.எஸ்.காலனி போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் அவர் வேலைக்கு சென்றுவிட்டார். சில நாட்கள் கழித்து போலீசார் அத்துமீறி என் வீட்டுக்கு வந்து சோதனை செய்தனர். மீண்டும் எனது மகனை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்து சென்றனர். நாங்கள் அவனை வீட்டுக்கு அழைத்து வந்தோம். தன்னை போலீசார் அடித்து துன்புறுத்தியதாக தெரிவித்தான். உடலில் சில காயங்களையும் எங்களிடம் காண்பித்தான். மூச்சு விட முடியாமல் சிரமம் அடைந்தான். இதையடுத்து அவனை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜனவரி 24–ந்தேதி இறந்துவிட்டான். இந்தநிலையில் எனது மகனின் உடலை, பரிசோதனை செய்யாமல் எங்களிடம் ஒப்படைத்துவிட்டனர்.

போலீசார் தாக்கியதில்தான் எனது மகன் இறந்துள்ளான். எனவே சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சே‌ஷசாயி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.கருணாநிதி ஆஜராகி, “மனுதாரர் மகன் இறந்த உடன், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யாமலேயே ஒப்படைத்துள்ளனர். போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்துதான் மனுதாரர் மகன் இறந்துள்ளார். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்“ என்று வாதாடினார்.

விசாரணை முடிவில், ‘‘இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றப்படுகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த வழக்கை ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையிலான குழு 4 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்’’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story