அவமதிப்பு வழக்கு: ஐ.ஜி, போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 5 அதிகாரிகள் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு


அவமதிப்பு வழக்கு: ஐ.ஜி, போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட  5 அதிகாரிகள் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 March 2019 4:30 AM IST (Updated: 30 March 2019 4:30 AM IST)
t-max-icont-min-icon

அவமதிப்பு வழக்கில் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. மற்றும் நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 5 அதிகாரிகள் நேரில் ஆஜராகுமாறு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

கன்னியாகுமரியில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்தவர் கோவிந்தசாமி. 2016–ம் ஆண்டில் இவர் ராமநாதபுரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, தற்போது அங்கு பணியாற்றி வருகிறார். இவர் தனக்கு உரிய பதவி உயர்வு மற்றும் பணப்பலன்களை வழங்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் 2017–ம் ஆண்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, குறிப்பிட்ட நாட்களுக்குள் மனுதாரருக்கு உரிய பதவி உயர்வு மற்றும் நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.

ஆனால் ஐகோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அவர்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோவிந்தசாமி, மதுரை ஐகோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.

ஏற்கனவே அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரருக்கு உரிய தொகை வழங்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த ஐகோர்ட்டு, இந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது.

ஆனால் இதுவரை தனக்கு சேர வேண்டிய நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை என்று மனுதாரர் மீண்டும் ஐகோர்ட்டில் அவமதிப்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘சம்பந்தப்பட்ட அதிகாரிகளான மதுரை தென் மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், நெல்லை டி.ஐ.ஜி., கபில்குமார் சி.சரத்கர், நெல்லை போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா ஆகியோர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த வழக்கில் உரிய விளக்கம் அளிக்க மேற்கண்ட 5 அதிகாரிகளும் 4 வாரத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story