ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.10¾லட்சம் சிக்கியது 1,095 ஜோடி வெள்ளி தோடுகள் பறிமுதல்
ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.10¾லட்சம் சிக்கியது. அம்மாபேட்டை பகுதியில் 1,095 ஜோடி வெள்ளி தோடுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என தேர்தல் பறக்கும் படையினர் ஈரோடு மாவட்டத்தில் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி பணம் கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்து வருகிறார்கள்.
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வேலுசாமி மற்றும் போலீசார் நேற்று காலை 6.30 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் ரூ.5லட்சத்து 40 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் பவானி பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பதும், வியாபாரியான இவர் கோழிகளை விற்றுவிட்டு கர்நாடக மாநிலத்தில் இருந்து பணத்துடன் பவானிக்கு காரில் திரும்பியதும் தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அந்தியூர் தாசில்தார் கணேசனிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோல் ஈரோடு கிழக்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பாபு, முருகேசன் வெள்ளோடு அருகே உள்ள தண்ணீர்பந்தல் பகுதியில் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 24) என்பவர், சென்னிமலை பகுதியில் ரூ.86 ஆயிரத்துடன் திண்டலில் உள்ள நிதி நிறுவனத்துக்கு சென்று கொண்டிருந்தார். உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி அன்பழகன் மற்றும் குழுவினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேனில் தனியார் நிறுவன பிரதிநிதி ராமச்சந்திரன் (27) என்பவர் பிஸ்கட் விற்ற ரூ.74 ஆயிரம் பணத்துடன் ஈரோடு சென்று கொண்டிருந்தார். உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு பெருந்துறை தாசில்தார் துரைசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.
மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூர் மணியக்காரர் மேடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மாதவன் தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 900–ம் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. மேலும் சரக்கு ஆட்டோவில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர், மொடக்குறிச்சி பாரதியார் நகரை சேர்ந்த சண்முகம் (40) என்பதும், ஆட்டு வியாபாரியான இவர் ஆடுகள் வாங்க திருப்பூர் மாவட்டம் முத்தூரில் உள்ள சந்தைக்கு சென்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 லட்சத்து 19 ஆயிரத்து 900 ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
அம்மாபேட்டை அருகே பட்லூர் நால்ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்து, போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அங்குராஜ் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்து 650 கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்தப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் சரக்கு ஆட்டோவில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர், அம்மாபேட்டை அருகே உள்ள கோணார்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரிய வந்தது.
இதேபோல் அம்மாபேட்டை அருகே சின்னப்பள்ளம் பஸ் நிறுத்தம் பகுதியில் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட 1,095 ஜோடி வெள்ளி தோடுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 765 ஆகும்.
இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் வெள்ளி தோடுகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், பவானி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அதிகாரி இளங்கோ, தாசில்தார் வீரலட்சுமி ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.10லட்சத்து 81 ஆயிரத்து 550 சிக்கியது.