கோவை சிறுமி பலாத்காரம் செய்து கொலை: குற்றவாளிகளை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைப்பு


கோவை சிறுமி பலாத்காரம் செய்து கொலை: குற்றவாளிகளை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைப்பு
x
தினத்தந்தி 31 March 2019 5:05 AM IST (Updated: 31 March 2019 5:05 AM IST)
t-max-icont-min-icon

கோவை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதுவரை 100 பேரிடம் விசாரணை நடத்தியும் துப்பு எதுவும் கிடைக்கவில்லை.

துடியலூர்,

கோவையை அடுத்த துடியலூர் அருகே 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். அந்த சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்டு உடலில் காயங்கள் இருந்தன. அங்கு ஒரு டி-ஷர்ட்டும் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அந்த சிறுமியை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலையாளிகளை பிடிக்க ஏற்கனவே 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதற்கிடையே மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள், பிளஸ்-2 மாணவர், ஆட்டோ டிரைவர் உள்பட 100 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். ஆனால் இதுவரை துப்பு எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சிறுமியின் உடலில் சுற்றியிருந்த டி- ஷர்ட்டை போலீசார் கைப்பற்றினார்கள். அதை மோப்ப நாய் முகர்ந்து பார்த்து விசாரணையில் உள்ள யாரையும் அது அடையாளம் காட்ட வில்லை. அந்த டி-ஷர்ட்டில் ரத்தக்கறை உள்ளது. எனவே அந்த ரத்தக்கறை யாருடையது என்பது குறித்த பரிசோதனைக்காக டி-ஷர்ட்டை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அந்த டி-ஷர்ட்டை செல்போனில் படம் எடுத்து அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் போலீசார் அனுப்பி உள்ளனர். அதை அணிந்த யாரையாவது பார்த்தீர்களா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் அந்த டி-ஷர்ட்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் லோகோ இடம் பெற்றிருந்தது. அங்கு சென்று போலீசார் விசாரித்தபோது அதை தாங்கள் பிரிண்ட் செய்யவில்லை என்று அந்த நிறுவனத்தினர் கூறி விட்டனர்.

இதுகுறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறியதாவது-

கோவை சிறுமி கொலை செய்யப்பட்டதை யாரும் பார்க்கவில்லை. கண்காணிப்பு கேமரா காட்சிகளும் கிடையாது. மிகவும் சிக்கலான இந்த வழக்கில் சிறுமி பிணமாக கிடப்பதற்கு முன்பு அந்த இடத்தில் பொதுமக்களும், போலீசாரும் சிறுமியை தேடியுள்ளனர். அப்போது சிறுமியின் உடல் அங்கு இல்லை. ஆனால் மறுநாள் உடல் அங்கு கிடந்துள்ளது. எனவே சிறுமியின் உடலை அந்த பகுதியில் தான் எங்கோ ஒரு வீட்டில் இரவில் மறைத்து வைத்திருந்து அதிகாலை நேரத்தில் வீசியுள்ளனர்.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொலையாளிகள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தான் என்பது தெளிவாக தெரிகிறது. அவர்களை பற்றிய சில தடயங்கள் கிடைத்துள்ளன. சில தடயங்களை திரட்ட வேண்டியுள்ளது. ஆனால் வழக்கின் தன்மை கருதி அதை இப்போது வெளியே சொல்ல முடியாது. இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

சிறுமி கொலையில் தீவிர விசாரணை நடத்தியும், துப்புதுலங்காததால் தனிப்படை போலீசார் அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி துப்புதுலக்கி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலில் பதிவாகி உள்ள கொலையாளியின் தடயங்களையும், சந்தேகப்படும்படி விசாரணை நடத்தப்படும் வாலிபர்களின் உடலியல் தடயங்களையும் சேகரித்து சென்னைக்கு டி.என்.ஏ. (மரபணு) பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர்.

இதுதொடர்பான பரிசோதனை முடிவு ஒருசில நாட்களில் வந்துவிடும் என்றும், அதன்பின்னர் கொலையாளி யார்? என்று உறுதி செய்யப்பட்டு விடும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story