சத்தியில், தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை: வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4¾ லட்சம் பறிமுதல்
சத்தியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள கோவை ரோட்டில் நேற்று மாலை தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜேந்திரன், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையில், வேனில் ரூ.4 லட்சத்து 76 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. மேலும் அந்தப்பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து வேனில் வந்த 3 பேரிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள், திருப்பூர் மாவட்டம் அன்னூரை சேர்ந்த வெங்கட்ராமன், கோபால்சாமி மற்றும் மனோன்மணி என்பதும், அன்னூரில் இருந்து கர்நாடக மாநிலம் உபிளியில் உள்ள சந்தைக்கு ஆடுகள் வாங்கச்சென்றதும் தெரியவந்தது.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 லட்சத்து 76 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சத்தியமங்கலம் தாசில்தார் கார்த்திக்கிடம் ஒப்படைத்தனர். அவர் அந்தப்பணத்தை சத்தியமங்கலம் கிளை கருவூலத்துக்கு அனுப்பி வைத்தார்.