உடுமலை அருகே வாகன சோதனையில் ரூ.10¼ லட்சம் பறிமுதல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை


உடுமலை அருகே வாகன சோதனையில் ரூ.10¼ லட்சம் பறிமுதல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 3 April 2019 3:30 AM IST (Updated: 3 April 2019 3:26 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை அருகே பறக்கும்படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.10 லட்சத்து 41 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.

உடுமலை,

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படுகிறதா என்று கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்காக பறக்கும் படை, நிலைக் கண்காணிப்புக்குழு, ஒளிப்பதிவு குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தொகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிகண்டன், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி, போலீசார் சக்திவேல், கவிதா ஆகியோர் கொண்ட பறக்கும் படை குழுவினர் உடுமலை சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட உடுமலை – பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோமங்கலத்தை அடுத்துள்ள கூளநாயக்கன்பட்டி பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கிணத்துக்கடவை அடுத்துள்ள சிஞ்சுவாடி கிராமத்தில் இருந்து கோமங்கலம் புதூருக்கு வந்து கொண்டிருந்த ஒரு காரை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். காரில் சிஞ்சுவாடி கிராமத்தை சேர்ந்த 3 பேர் இருந்தனர். அவர்களில் ஒருவரிடம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரமும், இன்னொருவரிடம் ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்து 500 ம், மற்றொருவரிடம் ரூ.46 ஆயிரமும் என 3 பேரிடமும் சேர்த்து மொத்தம் ரூ.10 லட்சத்து 41 ஆயிரத்து 500 இருந்தது.

அந்த பணம் குறித்து பறக்கும்படை யினர் விசாரித்தனர். அப்போது அவர்கள், இடம் கிரையம் செய்வதற்காக அந்த பணத்தை கொண்டு வந்ததாக தெரிவித்தனர். ஆனால் அவர்களிடம், அந்த பணத்தை கொண்டு வருவதற்கு உரிய ஆவணங்கள் இல்லை. அதனால் அந்த பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.10 லட்சத்திற்கு மேல் இருந்ததால் தொகை பறிமுதல் செய்யப்பட்டது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து வருமானவரித்துறை அதிகாரிகள் உடுமலை தாலுகா அலுவலகத்திற்கு விரைந்து வந்து, அந்த பணத்திற்கு வருமான வரி கட்டப்பட்டுள்ளதா? என்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தேர்தல் பறக்கும் படையினரால், உடுமலை ஆர்.டி.ஓ. அசோகனிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story