பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி வீடுகளில் வருமானவரி சோதனை நடத்தப்படுமா? -மு.க.ஸ்டாலின் கேள்வி


பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி வீடுகளில் வருமானவரி சோதனை நடத்தப்படுமா? -மு.க.ஸ்டாலின் கேள்வி
x
தினத்தந்தி 5 April 2019 11:15 PM GMT (Updated: 5 April 2019 5:31 PM GMT)

வீடுகளில் கோடி, கோடியாக பணம் வைத்திருக்கும் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது வீடுகளில் வருமானவரி சோதனை நடத்தப்படுமா? என கரூர் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

கரூர், 

கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், நேற்று காலை கரூர் அருகே உள்ள ராயனூர் திடலில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு வாக்கு கேட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தம்பிதுரைக்கு நாடாளுமன்ற தேர்தலில் சீட்டு கிடைக்குமா? கிடைக்காதா? என்பது பற்றி கடைசி வரைக்கும் அவருக்கே சந்தேகம் இருந்தது. ஏனெனில் மத்திய அரசின் கையை பிடித்து கொண்டு ஆட்சி செல்கையில், மத்திய அரசு எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை என பகிரங்கமாக அவர் விமர்சித்து இருந்தார். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போதும் கூட அவர், இடைக்கால நிதிநிலை அறிக்கையானது பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையாக உள்ளது. விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் போதுமானதல்ல. இந்த சலுகைகளை 2018-ல் ஏன் அறிவிக்கவிலை என கேள்வி எழுப்பியதை கரூர் மக்கள் மறக்க இயலுமா?. நாடாளுமன்றத்தில் பல பிரச்சினைகளுக்கு வாக்கெடுப்பு நடந்தபோதும் கூட ஆதரித்து தான் வாக்களித்தோம். ஆனால் எங்கள் மீது ஏன் நம்பிக்கை வைக்கவில்லை? என்று கேள்வி கேட்டவர் தம்பிதுரை.

ஆனால் தற்போது அவர் பா.ஜ.க.வுடன் சேர்ந்து கொண்டு கரூர் வேட்பாளராக உள்ளார். இதன் காரணமாக அவர் செல்லும் இடமெல்லாம் அவரை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். அப்போது ஓட்டு போட்டால் போடுங்க... இல்லையெனில் போங்க... என அவர் கூறியிருக்கிறார். கரூர் தொகுதிக்கு மத்திய அரசிடமிருந்து என்ன திட்டம் கொண்டு வந்தார் என அவரால் சொல்ல முடியுமா?. இதை எல்லாம் எண்ணி பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி தன்னை எம்.ஜி.ஆர். ஆக நினைத்து கொண்டு திறந்தவேனில் பிரசாரம் செய்கிறார். ஆட்சியில் இருக்கும் அவர்கள், தங்களது சாதனைகளை கூறி, ஓட்டு கேட்பார்கள் என பார்த்தோம். ஆனால் அதற்கு மாறாக தி.மு.க.-காங்கிரஸ் கட்சியை விமர்சித்து தான் ஓட்டு கேட்கிறார். ஆனால் நாங்கள் அப்படியல்ல, கருணாநிதி ஆட்சியில் ரூ.7 ஆயிரம் கோடி விவசாய கடன் ரத்து செய்தது உள்ளிட்ட சாதனைகளை கூறியும், நீட் தேர்வு ரத்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையினை சுட்டி காட்டியும் வாக்கு கேட்கிறோம்.

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் தானே? அப்போது தி.மு.க. ஆட்சியில் இருந்ததே என கூறுகின்றனர். இதில் உண்மை என்னவெனில் நீதிமன்றத்தை நாடி, தி.மு.க. நீட்டை தமிழகத்துக்கு கொண்டுவர அனுமதிக்கவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் தான் நீட் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அரியலூர் மாணவி அனிதா தன் உயிரை மாய்த்தார். ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு மருத்துவபடிப்பு கனவாக தான் போகிறது. 2 தடவை நீட் ரத்து தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. எனினும் அது தொடர்பாக மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தர அ.தி.மு.க. அரசு மறுத்துவிட்டது. தொடர்ந்து தற்போதும் கூட நீட் தேர்வு பணிகளில் அவர்கள் தீவிரமாக உள்ளனர். நிச்சயம் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், அதில் மத்திய அரசு தலையிடாது என காங்கிரஸ் சொல்லியிக்கிறது. இதற்கு விரைவில் ஒரு நல்ல தீர்வு வரும். சத்தீஷ்கார், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடனேயே விவசாய கடனை ரத்து செய்தது தான், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதற்கான சாட்சி.

ஏழை, எளிய மக்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என ராகுல் காந்தியின் அறிவிப்பு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்தநிலையில் மோடி ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என கூறி ஒரு திட்டம் செயல்படுத்தினார். ஒரு தவணை தொகை ரூ.2 ஆயிரமாவது வந்து சேர்ந்ததா? வரும்... ஆனால் வராது என்கிற நிலை தான் இருக்கிறது.

மேலும் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் வெளிநாட்டில் உள்ள ரூ.90 லட்சம் கோடி கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வந்து ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என கூறினார்களே, ரூ.15 ஆவது செலுத்தினார்களா?. கருப்பு பணம் எவ்வளவு மீட்கப்பட்டுள்ளது என சொல்ல முடியுமா? என்றால் முடியாது. இதையெல்லாம் பொய்யான வாக்குறுதியாக ஆகிவிட்டதே என எண்ணி காங்கிரசின் மக்களுக்கான தேர்தல் அறிக்கையை பார்த்து மோடி பயந்து போய் பிதற்றுகிறார். வானத்தை கிழித்து வைகுண்டத்தை காட்டுவேன், மணலை கயிறாக திரிப்பேன் என்பது தான் மோடியின் தேர்தல் அறிக்கை. அதில் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என்பது மக்களுக்கு தெரியும்.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை பார்த்து மக்கள் மகிழ்ச்சியைடைந்துள்ளனர். கரூரில் ஜவுளி ஏற்றுமதியை அதிகப்படுத்த கட்டமைப்பு பணிகள், உலகத்தரம் வாய்ந்த ஜவுளி நகரமாக மாற்றுவது, சாயப்பூங்கா அமைப்பது, ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகையை பெற்று தர நடவடிக்கை, கொசுவலைகளை மத்திய-மாநில அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை, தொழில் நுட்ப வசதியுடன் கூடிய பஸ் பாடி பூங்கா அமைப்பது, தாதம்பாளையம் ஏரியை தூர்வாரி அமராவதி நீரை கொண்டு வருவது உள்ளிட்ட வாக்குறுதிகள் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும்.

18 தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறபோது, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி மிச்சமாக உள்ளது. அதில் செந்தில்பாலாஜி நின்று மீண்டும் வெல்லப்போவது உறுதி. வழக்கு உள்ளதால் அதனை நிறுத்தி வைத்துள்ளார்கள். சூலூரை சேர்த்து தற்போது 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்து, உச்சநீதிமன்றத்தை நாடி வாதாடினோம். இதனால் தேர்தல் தேதியை நிர்ணயிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் 22 தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறும். ஏற்கனவே தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் 97 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதில் இந்த 22 பேரும் சேர்ந்தார்களே ஆனால், தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி நீடிக்குமா?. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை, ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பயப்படுகிறார்.

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் 2 நாள் வருமானவரித்துறை சோதனை நடந்தது. இதில் முறைப்படி கணக்கு இருந்ததால், எதுவுமே சிக்கவில்லை. மாறாக 2 நாட்கள் வேட்பாளர் கதிர்ஆனந்த் ஓட்டு கேட்க செல்ல முடியாத நிலை தி.மு.க.வுக்கு ஏற்பட்டது. அதற்கு பிறகு, சம்பந்தமில்லாத இடத்திற்கு சென்று பணத்தை எடுத்திருக்கிறார்கள். அதனை எடுத்தார்களா? அல்லது அவர்களே வைத்து விட்டு எடுத்தார்களா? என்பது தெரியவில்லை.

தேர்தல் ஆணையத்துக்கு, போலீசாரிடமிருந்து புகார் வந்ததால் சோதனை நடத்தப்படுகிறதாக என கூறுகிறார்கள். இப்போது நான் எதிர்கட்சி தலைவராக சொல்கிறேன். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடி வீடுகளில் கோடி, கோடியாக பணம் உள்ளது. வருமானவரித்துறை சோதனை நடத்துவார்களா?. தற்போது வேலூரில் சதி செய்து, நாடாளுமன்ற தேர்தலோடு ஆம்பூர், குடியாத்தம் இடைத்தேர்லை நிறுத்த சதி செய்வதாக தெரிகிறது. விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தொகுதியில் இடைத்தேர்தலை நிறுத்த தூத்துக்குடியில் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் வீடுகளில் சோதனையை நடத்துகின்றனர். இதனால் தமிழகத்தில் ஆட்சிக்கு ஆபத்து வராது என நினைக்கின்றனர். மத்தியில் ராகுல்காந்தி ஆட்சிக்கு வந்ததும், தமிழகத்தில் ஒரு நிமிடம் கூட அ.தி.மு.க. ஆட்சி நீடிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தி.மு.க. சொத்து பாதுகாப்புக்குழு செயலாளர் கே.சி.பழனிசாமி, மாநில விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி, நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், நெசவாளர் அணி செயலாளர் பரணி மணி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் சின்னசாமி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாநில நெசவாளர் அணி செயலாளர் விசா.சண்முகம் உள்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story