முன்விரோதத்தில், பழி தீர்ப்பதற்காக நண்பர்களுடன் சேர்ந்து வெடிகுண்டுகளை தயாரித்தேன் கைதான ரவுடி போலீசில் வாக்குமூலம்


முன்விரோதத்தில், பழி தீர்ப்பதற்காக நண்பர்களுடன் சேர்ந்து வெடிகுண்டுகளை தயாரித்தேன் கைதான ரவுடி போலீசில் வாக்குமூலம்
x
தினத்தந்தி 5 April 2019 11:15 PM GMT (Updated: 5 April 2019 11:15 PM GMT)

முன்விரோதத்தில் எனது எதிரியை பழி தீர்க்கவே நண்பர்களுடன் சேர்ந்து நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்தேன் என்று போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் ரவுடி கூறியுள்ளார்.

பாகூர்,

புதுவை மாநிலம் பரிக்கல்பட்டில் முள்ளோடை ரோட்டில் உள்ள ஒரு தனியார் மதுக்கடை பின்புறம் 8 பேர் கொண்ட கும்பல் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார், கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி மற்றும் போலீசார் விரைந்து சென்று 8 பேர் கும்பலை மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் லாஸ்பேட்டை நெசவாளர் நகரை சேர்ந்த ராஜேஷ் (வயது 28) மற்றும் அவரின் நண்பர்கள் அய்யனார் (29), ராஜா (27), மணிகண்டன் (27), கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த ஜெயந்தன் (22), கார்த்திகேயன் (26), தமிழக பகுதியான கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன் (29), மதகடிப்பட்டு அரவிந்தன் (26) என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதில் பிடிபட்ட ராஜேஷ் ரவுடி என்பதும் அவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 4 நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்களை பறிமுதல் செய்தனர்.

கைதான ரவுடி ராஜேஷ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

எனது சொந்த ஊர் லாஸ்பேட்டை நெசவாளர் நகர் ஆகும். என் மீது விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் போலீஸ்நிலையத்தில் 2 கொலை வழக்கு, கொலை முயற்சி, அடி - தடி வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் சம்பந்தமாக ஆரோவில் போலீசார் எனக்கு அடிக்கடி தொல்லை கொடுத்ததால், பாகூரில் வாடகை வீடு ஒன்றை எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தேன்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சோரியாங்குப்பத்தைச் சேர்ந்த மணிபாலனுக்கும் எனக்கும் மதுக்கடையில் வைத்து தகராறு ஏற்பட்டது. அப்போது நான் மணிபாலனை தாக்கியதோடு அவருடைய வீட்டையும் சூறையாடினேன். அதனால் என் மீது மணிபாலன் பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததால் போலீசார் என்னை கைது செய்தனர்.

அதன் பிறகு ஜாமீனில் வெளிவந்த என்னை கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிபாலனும் அவரது நண்பரான சோரியாங்குப்பத்தை சேர்ந்த பட்டு என்ற சதாசிவமும் தாக்கினார்கள். இதனால் சதாசிவம் மீது விரோதமும் கடும் ஆத்திரமும் ஏற்பட்டது. மேலும் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். அது குறித்து லாஸ்பேட்டை பகுதியில் உள்ள என்னுடைய நண்பர்களுக்கு தெரிவித்தேன்.

பின்னர் நானும், எனது நண்பர்களும் சேர்ந்து 4 நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்தோம். மேலும் 4 புதிய கத்தி மற்றும் அரிவாள்களை வாங்கினோம். பின்னர் கொலை திட்டத்தை நிறைவேற்ற நேற்று முன்தினம் பாகூர் அருகே பரிக்கல்பட்டு, முள்ளோடை ரோட்டில் உள்ள தனியார் மதுக்கடை பின்புறம் முட்புதரில் சதா சிவத்தின் வருகைக்காக ஆயுதங்களுடன் காத்திருந்தோம்.

ஆனால் அப்பகுதியில் மதுக்கடைக்கு மதுகுடிக்க வந்தவர்கள் எங்களைப் பார்த்து பாகூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டனர். உடனே போலீசார் வந்து சுற்றி வளைத்து மடக்கி பிடித்துவிட்டனர்.

இவ்வாறு அந்த வாக்கு மூலத்தில் ராஜேஷ் கூறியுள்ளார்.

Next Story