பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் ‘விவசாயிகள், பெண்களுக்கு நல்வாழ்வு அளிக்கும் அற்புத திட்டங்கள்’ - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் புகழாரம்


பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் ‘விவசாயிகள், பெண்களுக்கு நல்வாழ்வு அளிக்கும் அற்புத திட்டங்கள்’ - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் புகழாரம்
x
தினத்தந்தி 9 April 2019 5:00 AM IST (Updated: 9 April 2019 3:46 AM IST)
t-max-icont-min-icon

‘பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், பெண்களுக்கு நல்வாழ்வு அளிக்கும் அற்புதமான திட்டங்கள் இடம் பெற்றுள்ளன’ என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

கீரனூர்,

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து, தொப்பம்பட்டி ஒன்றிய பகுதியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று வாக்கு சேகரித்தார். தொப்பம்பட்டி அருகே உள்ள கோட்டத்துறையில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் அமைச்சர் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்பதை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற உள்ளது. பிரதமராவதற்கு தகுதியானவர், நரேந்திர மோடி தான். அவர், பிரதமர் பதவி ஏற்பது உறுதியாகி விட்டது. பா.ஜனதா வெளியிட்ட தேர்தல் அறிக்கை, வெற்றி வாய்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

சிறு, குறு விவசாயிகள், வியாபாரிகள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்வாழ்வு அளிக்கும் அற்புதமான பல்வேறு திட்டங்கள், சலுகைகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. வருடத்துக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி, முதற்கட்டமாக ஏழை விவசாயிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசு ரூ.2 ஆயிரம் செலுத்தியுள்ளது.

தமிழக அரசு இன்னும் 2½ ஆண்டு காலம் தொடர்ந்து நீடிக்கும். எனவே மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமையும்போது, தமிழகத்தின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வலியுறுத்துவோம். பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கேட்டு பெறுவோம்.

வறுமைகோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது. இதனை பொறுத்து கொள்ள முடியாத மு.க.ஸ்டாலின் அந்த திட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறார். திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர், வெளிமாநிலத்தில் தொழில் நடத்தி வருகிறார். இதனால் அவரை எப்போதும் மக்கள் பார்க்க முடியாது.

ஆனால் நமது வேட்பாளர் ஜோதிமுத்து உள்ளூர்காரர். அவர், உங்களது கோரிக்கைகளை தீர்க்க கூப்பிட்ட நேரத்தில் ஓடோடி வருவார். எனவே மாம்பழ சின்னத்துக்கு வாக்களித்து அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல்சீனிவாசன்கூறினார்.

இந்த பிரசாரத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், தொப்பம்பட்டி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கிட்டுசாமி, ஒன்றிய துணை செயலாளர் அப்பன் என்ற கருப்பசாமி, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் பரசுராமன், கோபால், அய்யாசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.


Next Story