ராகுல்காந்தி பிரதமராக வந்தால் புதுவையில் மக்கள் நலத்திட்டங்கள் தடை இல்லாமல் செயல்படுத்தப்படும் - காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் உறுதி


ராகுல்காந்தி பிரதமராக வந்தால் புதுவையில் மக்கள் நலத்திட்டங்கள் தடை இல்லாமல் செயல்படுத்தப்படும் - காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் உறுதி
x
தினத்தந்தி 10 April 2019 11:45 PM GMT (Updated: 10 April 2019 8:25 PM GMT)

ராகுல்காந்தி பிரதமராக வந்தால் புதுவையில் மக்கள் நலத்திட்டங்கள் தடை இல்லாமல் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் கூறினார்.

புதுச்சேரி,

புதுவை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் நேற்று மாலை ராஜ்பவன் தொகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். இதற்காக அவர் வைத்திக்குப்பம் கடற்கரையில் தனது பிரசார பயணத்தை தொடங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவு கேட்டு நான் உங்களிடம் வந்துள்ளேன். நாம் ஏன் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள விவசாயிகள், மீனவர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பாக இருப்பது காங்கிரஸ் கட்சி தான். காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக உள்ளார். அவர் தனது தேர்தல் அறிக்கையில் சிறப்பான பல திட்டங்களை அறிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள வறுமையை ஒழிக்கவே வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் திட்டத்தை அறிவித்துள்ளார். மீனவ மக்கள் பயன்பெறும் வகையில் தனியாக அமைச்சகம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மீனவர்களுக்கு பல்வேறு பயன்கள் கிடைக்கும். இவை எல்லாம் கிடைக்க வேண்டும் என்றால் ராகுல்காந்தி பிரதமராக வர வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏன் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கவில்லை. இதனை அறிவிக்க வேண்டும் என்று அந்த கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் மோடியிடம் வலியுறுத்த வில்லை. எனவே மக்களே சிந்திக்க வேண்டும். புதுவை மாநிலத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். மத்தியில் இருந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றால் அதற்கு நாடாளுமன்றத்தில் புதுவை தொகுதியில் இருந்து எம்.பி.யாக செல்பவர் பேச வேண்டும். அதற்கு அனுபவம் உள்ளவர் தான் எம்.பி.யாக செல்ல வேண்டும். நமது வேட்பாளர் சிறந்த அனுபவசாலி. எனவே பொதுமக்களே சிந்தித்து வாக்களியுங்கள்.

ராகுல்காந்தி பிரதமராக வந்தால் புதுவை மாநிலத்தில் மக்கள் நலத்திட்டங்கள் தடை இல்லாமல் செயல்படுத்தப்படும். இலவச அரிசி மாதந்தோறும் வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை, மீனவர்கள் உதவித்தொகை தடையில்லாமல் வழங்கப்படும். புதுவை மாநிலம் மேலும் வளர்ச்சி அடையும். எனவே நீங்கள் கை சின்னத்திற்கு வாக்களித்து நமது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story