பெரியார் பஸ் நிலைய பகுதியில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் கோரி வழக்கு மாநகராட்சி கமிஷனருக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்

மதுரை பெரியார் பஸ் நிலைய பகுதியில் பயணிகளுக்கு உரிய வசதிகள் செய்ய கோரிய வழக்கில் மாநகராட்சி கமிஷனருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரை,
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
மதுரை மாநகராட்சியில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின்கீழ் மதுரை பெரியார் பஸ் நிலையம் இடிக்கப்பட்டு ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. மதுரை நகரை சுற்றியுள்ள கிராம மக்கள் நாள்தோறும் பெரியார் பஸ்நிலையத்துக்கு வந்து செல்கிறார்கள். தற்போது அங்கு கட்டுமான பணிகள் நடப்பதால், சாலையோரங்களில் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. ஆனால் அந்த இடங்களில் பொதுமக்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. குறிப்பாக பெண்கள், மாணவர்கள், முதியவர்கள் என அனைத்து வகை பயணிகளும் சுட்டெரிக்கும் வெயிலில் நிற்கும் அவலம் உள்ளது. அங்கு நிழற்குடை, குடிநீர், கழிப்பறை போன்ற எந்த வசதிகளும் இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகிறார்கள். பயணிகள் நலன் கருதி, உரிய வசதிகள் ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
முடிவில், இந்த வழக்கு குறித்து மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 23–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.






