பாலியல் பலாத்காரம் செய்து 5 வயது சிறுமி கொலை, வளர்ப்பு தந்தைக்கு 3 ஆயுள் தண்டனை - கோவை கோர்ட்டு தீர்ப்பு


பாலியல் பலாத்காரம் செய்து 5 வயது சிறுமி கொலை, வளர்ப்பு தந்தைக்கு 3 ஆயுள் தண்டனை - கோவை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 22 April 2019 10:45 PM GMT (Updated: 22 April 2019 6:48 PM GMT)

கோவையில் பாலியல் பலாத்காரம் செய்து 5 வயது சிறுமியை கொன்ற வளர்ப்பு தந்தைக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்புக் கூறியது.

கோவை,

கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 41). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மகேந்திரன் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கும், முதல் கணவருக்கும் பிறந்த 5 வயது பெண் குழந்தை அவர்களின் பராமரிப்பில் வளர்ந்து வந்தது.

இந்த நிலையில் அந்த பெண், தான் ஏற்கனவே சென்னையில் பணிபுரிந்த நிறுவனத்தில் இருந்து வர வேண்டிய பணத்தை பெறுவதற்காக கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந் தேதி சென்னை சென்றார். அப்போது தனது 5 வயது பெண் குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு வளர்ப்பு தந்தை மகேந்திரனிடம் கூறி விட்டு சென்றார்.

அன்று இரவு மகேந்திரன் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது சத்தம் போட்டதால் அந்த சிறுமியை பலமாக தாக்கியதால் பரிதாபமாக இறந்தாள். இது குறித்து கோவை காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டப்பிரிவு உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த, இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட மகேந்திரனுக்கு இந்திய தண்டனை சட்டப்பிரிவு 376 (கற்பழிப்பு)-ன் கீழ் ஒரு ஆயுள் தண்டனையும், இந்திய தண்டனை சட்டம் 302 (கொலை) பிரிவின் கீழ் ஒரு ஆயுள் தண்டனையும், போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு ஆயுள் தண்டனையும் ஆக 3 ஆயுள் தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பு கூறினார். அப்போது, 3 ஆயுள் தண்டனையையும் தனித்தனியே அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு கூறினார். இதனால், குற்றம் சாட்டப்பட்ட மகேந்திரனுக்கு 3 ஆயுள் தண்டனையை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஆர்.சரோஜினி ஆஜரானார்.

Next Story