அம்மாபேட்டை அருகே கார்–மோட்டார்சைக்கிள் மோதல்; 2 பேர் சாவு, பொதுமக்கள் சாலை மறியல்


அம்மாபேட்டை அருகே கார்–மோட்டார்சைக்கிள் மோதல்; 2 பேர் சாவு, பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 24 April 2019 10:45 PM GMT (Updated: 24 April 2019 6:44 PM GMT)

அம்மாபேட்டை அருகே கார்–மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் இறந்தார்கள். விபத்து நடத்த இடத்தில் வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

அம்மாபேட்டை,

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஒலகடம் கொளந்தபாளையத்தை சேர்ந்தவர் விஜயன் (வயது 33). கட்டிட தொழிலாளி. பூனாட்சி நத்தமேடு மனக்காட்டை சேர்ந்தவர் மினிச்சாமி (30). இவர் விஜயனின் மைத்துனர்.

இந்தநிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் விஜயனும், மினிச்சாமியும் அந்தியூர் ரோட்டில் பூனாட்சிக்கு சென்றுகொண்டு இருந்தார்கள். பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அருகே சென்றபோது எதிரே ஒரு கார் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் காரும்–மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட விஜயனும், மினிச்சாமியும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்கள். விபத்து நடந்ததும் காரை ஓட்டிவந்தவர் அங்கிருந்து ஓடிவிட்டார். சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த சுமார் 200–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு கூடிவிட்டார்கள்.

அந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதால் அங்கு வேகத்தடை அமைக்கவேண்டும் அல்லது வேகத்தடுப்பான்கள் வைக்கவேண்டும் என்று அந்தியூர்–அம்மாபேட்டை ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும், அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று, சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அங்கு வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டார்கள். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே 2 உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள். விபத்தில் இறந்த விஜயனுக்கு சின்னப்பிள்ளை என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மினிச்சாமிக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.


Next Story