இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி: அரக்கோணம் ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை
இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி காரணமாக அரக்கோணம் ரெயில் நிலையம், பஸ் நிலைய பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர்.
அரக்கோணம்,
இலங்கையில் கடந்த 21–ந் தேதி கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 250–க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். இதையொட்டி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தி சோதனை நடத்த வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மேற்பார்வையில் நேற்று அரக்கோணம் ரெயில் நிலையம், புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் போலீசார் பலத்த சோதனையில் ஈடுபட்டனர்.
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டர்கள், முன்பதிவு டிக்கெட் கவுண்டர்கள், ரெயில் பயணிகளின் பேக்குகள், உடைமைகள் வைக்கப்பட்டு உள்ள பைகளில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலமாக சோதனை செய்தனர்.
மேலும் அரக்கோணம் புதிய, பழைய பஸ் நிலையம் வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் சோதனை செய்தனர். மார்க்கெட் மற்றும் மக்கள் கூடும் பகுதிகளில் அதிரடியாக சோதனை செய்தனர்.
அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர்கள் ரபேல்லூயிஸ், சீரஞ்சிவிலு, ராஜா ஆகியோர் அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலைய பிளாட்பாரம் மற்றும் மின்சார, எக்ஸ்பிரஸ் ரெயில்களில் சோதனை செய்தனர்.
அரக்கோணம் நகரம் மற்றும் தாலுகா பகுதியில் சந்தேப்படும்படியான நபர்கள் இருந்தால் உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.