மண் கடத்தலை தடுக்கச்சென்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் 3 பேர் கைது
மண் கடத்தலை தடுக்கச்சென்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள அய்யூர்அகரம் பகுதியில் ஏரியில் இருந்து மண் கடத்தப்படுவதாக நேற்று காலை தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார், அய்யூர்அகரம் ஏரிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 4 பேர் நின்றுகொண்டு பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மண் அள்ளிக்கொண்டிருந்தனர். உடனே அவர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது அவர்கள் 4 பேரும் சேர்ந்து சப்–இன்ஸ்பெக்டர் பிரகாசை அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
மேலும் 4 பேரில் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், விழுப்புரம் அருகே சோழகனூரை சேர்ந்த ராஜாமணி மகன் அய்யப்பன் (வயது 40), அய்யூர்அகரம் ராமசாமி மகன் அய்யப்பன் (55), வெள்ளேரிப்பட்டு கோபால் மகன் அய்யப்பன் (20) என்பதும், தப்பி ஓடியவர் அய்யூர்அகரம் புருஷோத்தமன் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து, டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய புருஷோத்தமனை போலீசார் தேடி வருகின்றனர்.