வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் சி.சி.டி.வி. கேமரா கடையை மூடி, பூட்டு போட்ட நிதி நிறுவனத்தினர் போலீசார் விசாரணை


வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் சி.சி.டி.வி. கேமரா கடையை மூடி, பூட்டு போட்ட நிதி நிறுவனத்தினர் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 April 2019 10:15 PM GMT (Updated: 30 April 2019 7:54 PM GMT)

வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் சி.சி.டி.வி. கேமரா விற்பனை செய்யும் கடையை மூடி நிதிநிறுவனத்தினர் பூட்டு போட்டனர். இதுதொடர்பாக இருதரப்பினர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சி நம்பர்-1 டோல்கேட் விக்னேஷ் நகரை சேர்ந்தவர் கோபிநாத்(வயது37). இவர், நம்பர்-1 டோல்கேட் பகுதியில் சி.சி.டி.வி. கேமரா விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். திருச்சி தென்னூர் மல்லிகைபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெரால்டு(39). இவர், திருச்சி சாஸ்திரி சாலையில் ‘ஜே.டி.ஆர். பைனான்ஸ்’ என்ற பெயரில் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார்.

ஜெரால்டு நடத்தி வரும் நிதிநிறுவனத்தில், கோபிநாத் ரூ.1 லட்சம் கடன் வாங்கி இருந்தார். அந்த பணத்தை பலமுறை கேட்டும் கோபிநாத் திரும்ப கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கடைக்கு பூட்டு

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 8.15 மணிக்கு கேமரா விற்பனை செய்யும் கடைக்கு ஜெரால்டு சிலருடன் வந்து, அங்கு கடையின் ஷட்டரை இழுத்து மூடி பூட்டு போட்டு விட்டு சென்று விட்டார். பின்னர் கடை உரிமையாளரான கோபிநாத் மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரி ஆகியோர் சாஸ்திரிநகரில் உள்ள நிதிநிறுவனத்திற்கு சென்று கடை சாவியை ஜெரால்டிடம் கேட்டபோது, அங்கு கோபிநாத்தை ஒரு அறைக்குள் தள்ளி கையால் தாக்கி மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. காயம் அடைந்த கோபிநாத் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இது குறித்து கோபிநாத் தில்லைநகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் நிதிநிறுவன உரிமையாளர் ஜெரால்டு, ஜஸ்டின், செல்வராஜ் மற்றும் சிலர் மீது சப்-இன்ஸ்பெக்டர் நவீன்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

நிதி நிறுவன உரிமையாளர் புகார்

இதுபோல நிதி நிறுவன உரிமையாளரான ஜெரால்டு தில்லைநகரில் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில், கோபிநாத் தன்னிடம் பணத்தை கடனாக வாங்கி விட்டு தராமல் ஏமாற்றியதாகவும், பணத்தை திரும்ப கேட்டபோது கோபிநாத் தனது மனைவி மற்றும் சிலருடன் சேர்ந்து அவதூறாக பேசி தன்னை தாக்கி மிரட்டியதாகவும் கூறப்பட்டிருந்தது.

அதன்பேரில், கோபிநாத், அவரது மனைவி பரமேஸ்வரி மற்றும் குரு சந்திரன், பிரேம்நாத் ஆகிய 4 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் நவீன்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story