நகைக்கடை ஊழியரை போலீஸ்காரர்கள் தாக்கியதாக புகார்: போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை


நகைக்கடை ஊழியரை போலீஸ்காரர்கள் தாக்கியதாக புகார்: போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 30 April 2019 11:15 PM GMT (Updated: 2019-05-01T03:26:10+05:30)

நகைக்கடை ஊழியரை போலீஸ்காரர்கள் தாக்கியதாக கூறி உறவினர்கள் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

கோபால்பட்டி,

சாணார்பட்டி அருகே உள்ள லட்சுமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பெருமாள்சாமி. அவருடைய மகன் அரிகிருஷ்ணன். இவர், திண்டுக்கல்லில் உள்ள ஒரு நகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் அவர் பணிமுடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

லட்சுமிநாயக்கன்பட்டி அருகே வந்தபோது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர்கள் 2 பேர் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அரிகிருஷ்ணனை தாக்கி அவருடைய மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அரிகிருஷ்ணன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அரிகிருஷ்ணனின் உறவினர்கள், நேற்று திரண்டு வந்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் அரிகிருஷ்ணனை தாக்கிய போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோ‌ஷங்களை எழுப்பினர். இதையடுத்து போலீசார் இதுதொடர்பாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அரிகிருஷ்ணனின் தந்தை பெருமாள்சாமி புகார் மனு கொடுத்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story