ஊத்துக்குளி விருமாண்டம்பாளையம் அருகே கோவில் கட்டுவதற்கு ஊர்மக்கள் எதிர்ப்பு - கலெக்டர் அலுவலகத்தில் முறையீடு


ஊத்துக்குளி விருமாண்டம்பாளையம் அருகே கோவில் கட்டுவதற்கு ஊர்மக்கள் எதிர்ப்பு - கலெக்டர் அலுவலகத்தில் முறையீடு
x
தினத்தந்தி 30 April 2019 11:55 PM GMT (Updated: 30 April 2019 11:55 PM GMT)

ஊத்துக்குளி விருமாண்டம்பாளையம் அருகே கோவில் கட்டுவதற்கு ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா விருமாண்டம்பாளையம் அருகே கீழேரிப்பதி, நொச்சிக்காடு, சொட்டக்கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் கிராமத்தில் பல தரப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் ஊருக்கு அருகே கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர்கள் 25 சென்ட் அளவு நிலத்தை விலைக்கு வாங்கியுள்ளனர். முதலில் வீடு கட்டுவதற்கு அந்த நிலம் வாங்கப்பட்டது என்று நினைத்தோம்.

இந்தநிலையில் அந்த இடத்தில் கோவில் கட்டுவதாக தகவல் கிடைத்தது. அந்த இடத்தில் இருந்து 40 மீட்டர் தொலைவில் ஊர் பொது மயானம் உள்ளது. தற்போது கோவில் கட்டும் இடத்தின் அருகில் தான், ஈமசடங்கு செய்வது வழக்கம். இந்த இடத்தில் கோவில் கட்டும்போது மயானத்துக்கு பிணம் கொண்டு செல்வதற்கும், ஈமசடங்கு செய்வதற்கும் பாதிப்பு ஏற்படும்.

ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து அந்த இடத்தில் கோவில் கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு விநாயகர் சிலையை அந்த இடத்தில் வைத்து விட்டு சென்று விட்டனர். இது கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. எங்களுடைய குல பெரியவர்கள் ஆலோசனைப்படி மயானத்துக்கு அருகில் கோவில் கட்டுவது என்பது ஊரை பாதிக்கும் என்று அஞ்சுகிறோம். எனவே சம்பந்தப்பட்ட இடத்தில் கோவில் கட்ட அனுமதிக்கக்கூடாது. அங்கு கோவில் கட்டாத வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story