கீழ்வேளூர் அருகே ஆற்றின் நடுவே தீப்பிடித்து எரிந்த மர்ம பொருள் போலீசார் விசாரணை


கீழ்வேளூர் அருகே ஆற்றின் நடுவே தீப்பிடித்து எரிந்த மர்ம பொருள் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 1 May 2019 10:15 PM GMT (Updated: 2019-05-02T02:20:50+05:30)

கீழ்வேளூர் அருகே ஆற்றின் நடுவே மர்ம பொருள் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கிள்ளுக்குடி பகுதியில் பாண்டவையாறு செல்கிறது. இந்த ஆற்றில் தற்போது தண்ணீர் இல்லாமல் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆற்றின் நடுவே மர்ம பொருள் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அதில் இருந்து தீப்பிழம்புகள் தோன்றின. இதை பார்த்த அந்த வழியாக சென்ற சிலர் எந்த பொருள் தீப்பிடித்து எரிகிறது? என்பதை அறிவதற்காக கற்களை வீசினர். அப்போது தீப்பிடித்து எரிந்த பொருள் வெடித்து சிதறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

தகவலின்பேரில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜ், வலிவலம் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ரமேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, தீ விட்டு விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து போலீசார் கீழ்வேளூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ராஜராஜசோழன் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பின்னர் தீப்பிடித்து எரிந்த பொருள் குறித்து தீயணைப்பு படை வீரர்கள் ஆய்வு செய்தனர். இதில் எந்த பொருள் தீப்பிடித்து எரிந்தது என்பதை தீயணைப்பு படை வீரர்களால் கண்டறிய முடியவில்லை.

வெடிமருந்தா?

தீப்பிடித்து எரிந்தபோது வெடி சத்தமும் கேட்டதால் பாஸ்பரஸ் உள்ளிட்ட வேதி பொருட்கள் அடங்கிய வெடி மருந்தாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ள நிலையில் மாங்காய்களை பழுக்க வைக்க உதவும் கார்பைடு கற்களை சிலர் பதுக்கி வைக்க முயற்சி செய்து, பின்னர் அதில் தீ வைத்தார்களா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மர்ம பொருள் எரிந்த இடத்தில் இருந்து நேற்று மண்ணை ஆய்வு செய்வதற்காக போலீசார் எடுத்து சென்றனர். ஆற்றின் நடுவே மர்ம பொருள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story