காங்கேயம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலன் கைது


காங்கேயம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலன் கைது
x
தினத்தந்தி 4 May 2019 4:00 AM IST (Updated: 4 May 2019 3:44 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். சிறுமியை சீரழித்த மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

காங்கேயம்,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா அஞ்சூரை சேர்ந்தவர் சங்கர் கணேஷ் (வயது 33). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே தண்ணீர் பந்தல் பகுதியில் தங்கி இருந்து அங்குள்ள வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

அப்போது சங்கர் கணேசுக்கும், முதல் கணவரை விட்டு பிரிந்து, மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது மகளுடன் வசித்து வரும் 40 வயது உடைய பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்–மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் சங்கர் கணேசின் செயல்பாடுகள், அந்த பெண்ணுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் சங்கர் கணேஷ் வேலைக்கு சென்ற பிறகு, அவரின் செயல்பாடு குறித்து தனது மகளிடம், அந்த பெண் கேட்டுள்ளார். அப்போது அந்த சிறுமி, தன்னை சங்கர் கணேஷ் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். மேலும் அவருடன் வேலை பார்த்த மேலும் 2 பேரும் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், இந்த சம்பவம் குறித்து காங்கேயம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார். விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை, சங்கர்கணேஷ் மற்றும் அவருடன் வேலை பார்க்கும் வெள்ளகோவில் அருகே உள்ள மேட்டுப்பாளையம் நடுப்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன் (50) மற்றும் அதே ஊரை சேர்ந்த மற்றொரு முருகேசன் (47) ஆகியோரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து சங்கர் கணேசை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முருகேசன், மற்றொரு முருகேசன் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள். சிறுமியை தாயின் கள்ளக்காதலன் உள்பட 3 பேர் பலியால் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story