வில்லிவாக்கத்தில் கல்லூரி மாணவியை தாக்கி செல்போன் பறித்த வாலிபருக்கு தர்மஅடி


வில்லிவாக்கத்தில் கல்லூரி மாணவியை தாக்கி செல்போன் பறித்த வாலிபருக்கு தர்மஅடி
x
தினத்தந்தி 8 May 2019 4:00 AM IST (Updated: 8 May 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

வில்லிவாக்கத்தில் கல்லூரி மாணவியை தாக்கி அவரிடம் செல்போன் பறித்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

செங்குன்றம்,

சென்னை வில்லிவாக்கம் கிழக்கு மாட வீதியை சேர்ந்தவர் சவிதா (வயது 19). இவர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்து 2 பேர், சவீதாவிடம் முகவரி கேட்பது போல் அவரை தாக்கி கையில் வைத்திருந்த செல்போனை பறித்தனர்.

உடனே சவிதா கூச்சலிட்டதை தொடர்ந்து, அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை விரட்டினர். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த வாலிபர் தவறி கீழே விழுந்தார். மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பொதுமக்களிடம் சிக்கிய அந்த வாலிபரை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து வில்லிவாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த பிரேம் குமார் (20) என்பதும், அவருடன் வந்தவர் அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பதும் தெரியவந்தது. போலீசார் பிரேம்குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


Next Story