மதக்கலவரத்தை தூண்டும் வகையில்பேசிய கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் காங்கேயம் போலீஸ் நிலையத்தில் பா.ஜனதா கட்சியினர் புகார்
மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கேயம் போலீஸ் நிலையத்தில் பா.ஜனதா கட்சியினர் புகார் மனு கொடுத்தனர்.
காங்கேயம்,
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதிமய்யம் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசும்போது ‘‘முதல் தீவிரவாதி இந்து’’ என்று கூறியதாக கூறப்படுகிறது. இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது, திருப்பூர் மாவட்டம் காங்கேயம் போலீஸ் நிலையத்தில் பா.ஜனதா கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி இளைஞர் அணி பொதுச் செயலாளர் சிவப்பிரகாஷ் தலைமையில் 30–க்கும் மேற்பட்டோர் புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
கடந்த 12–ந் தேதி தேதி அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பள்ளபட்டியில் வாக்கு சேகரிக்க வந்த நடிகர் கமல்ஹாசன் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறும் நோக்கோடு, இந்தியாவில் முதல் தீவிரவாதி இந்து என்று பேசி உள்ளார்.
மத வேறுபாடின்றி வாழ்ந்து வரும் மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசிய நடிகர் கமல்ஹாசன் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.