மானாமதுரை அருகே ஊருணிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம் ஐகோர்ட்டு உத்தரவுப்படி பணி தொடங்கியது


மானாமதுரை அருகே ஊருணிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம் ஐகோர்ட்டு உத்தரவுப்படி பணி தொடங்கியது
x
தினத்தந்தி 15 May 2019 4:00 AM IST (Updated: 15 May 2019 3:30 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை அருகே ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவுப்படி ஊருணிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவில் தஞ்சாக்கூரில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தஞ்சைவாணன் மன்னன் ஆட்சி செய்த போது நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய அவர், அந்த பகுதியில் ஏராளமான ஊருணிகளை வெட்டினார். இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் பஞ்சமின்றி வாழ்ந்து வந்தனர். தஞ்சாக்கூர் கிராமத்தில் ஏராளமான ஊருணிகள் இருந்தன. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஊருணிகளை கிராம மக்கள் குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்தி வந்தனர்.

இந்தநிலையில் காலப்போக்கில் ஊருணிகளையும், வரத்துக் கால்வாய்களையும் சிலர் ஆக்கிரமித்தனர். இதனால் ஊருணிகள் மண் மேவி, சீமைக்கருவேல மரங்கள் முளைத்து, ஊருணிகள் இருந்த சுவடு தெரியாமல் மறைந்தன. ஏராளமான ஊருணிகளில், தற்போது 2 ஊருணிகளை தவிர மற்ற 6 ஊருணிகள் மாயமாகின.

இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலசுப்பிரமணியன் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு மதுரை கிளை ஆக்கிரமிப்புகளை அகற்றி ஊருணிகளை சீரமைக்க உத்தரவிட்டது. இதையடுத்து ஊருணிகளை மீட்டு தூர்வார சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் நேற்று வருவாய் கோட்டாட்சியர் செல்வக்குமாரி, மானாமதுரை தாசில்தார் யாஸ்மின் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் 3 ஊருணிகளில் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தொடங்கி வைத்தனர். மற்ற ஊருணிகளில் சர்வே செய்யும் பணிகள் முடிவடைந்த பின்பு பணிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.


Next Story