நகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்படும் தண்ணீர் தரம் குறைவு என புகார்: அம்மா உணவகத்துக்கு கொண்டு சென்ற 48 குடிநீர் கேன்கள் பறிமுதல்


நகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்படும் தண்ணீர் தரம் குறைவு என புகார்: அம்மா உணவகத்துக்கு கொண்டு சென்ற 48 குடிநீர் கேன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 May 2019 11:00 PM GMT (Updated: 17 May 2019 8:27 PM GMT)

பவானி நகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்படும் தண்ணீரின் தரம் குறைவாக உள்ளதாக புகார் கொடுத்ததன் எதிரொலியால் அம்மா உணவகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட 48 குடிநீர் கேன்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

பவானி,

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (ஆர்.ஓ. குடிநீர்) வழங்க அரசு திட்டம் தீட்டியது. இதற்காக அரசின் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு பவானி நகராட்சிக்கு உள்பட்ட 27 வார்டுகளிலும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாகவே நடந்து வருகிறது.

இதில் முதல் கட்டமாக 5 இடங்களில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்த சுத்திகரிப்பு நிலையங்களில் குடிநீர் கேன் (20 லிட்டர் கொண்டது) ரூ.7-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் அந்தந்த பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சென்று குடிநீர் கேன்களில் தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.

இந்த நிலையில் பவானி பகுதியை சேர்ந்த சில தனியார் குடிநீர் கேன்கள் விற்பனை செய்பவர்கள் பவானி போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரில், ‘நாங்கள் வினியோகம் செய்யும் குடிநீர் அரசின் தரச்சான்றிதழ் பெற்று விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் நகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் அரசின் தரச்சான்றிதழ் பெற்று விற்பனை செய்யப்படவில்லை. மேலும் நகராட்சி நிர்வாகம் சார்பில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் தரம் குறைவாக உள்ளது,’ என குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில் காமராஜர் நகர் பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பவானி பஸ் நிலையத்தின் அருகே உள்ள அம்மா உணவகத்துக்கு 48 குடிநீர் கேன்களுடன் சரக்கு ஆட்டோ ஒன்று புறப்பட்டது. இந்த சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்திய பவானி போலீசார் அதில் இருந்த 48 குடிநீர் கேன்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த குடிநீர் கேன்களை பரிசோதனை செய்ய பவானியில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

நகராட்சி நிர்வாகம் சார்பில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் தரம் குறைவாக உள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து 48 குடிநீர் கேன்களை போலீசார் பறிமுதல் செய்த சம்பவத்தால் பவானி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story