கூட்டுறவு கடன் சங்க செயலாளர் வீட்டில் 56 பவுன் நகை-ரூ.50 ஆயிரம் கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு


கூட்டுறவு கடன் சங்க செயலாளர் வீட்டில் 56 பவுன் நகை-ரூ.50 ஆயிரம் கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 23 May 2019 4:30 AM IST (Updated: 23 May 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிமடம் அருகே ஓய்வுபெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் வீட்டில், மகள் திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்த 56 பவுன் நகை-ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே மேலநெடுவாய் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 59). இவர் ஆண்டிமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணிபுரிந்து, கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். மேலநெடுவாய் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு கூழ் காய்ச்சி ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக ராமச்சந்திரன் தன்னுடைய மனைவி இந்திரா மற்றும் மகள் கார்த்திகா ஆகியோரை கோவிலுக்கு முன்னரே அனுப்பிவிட்டு, அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்த நிலையில் இரவு 7 மணியளவில் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறும் நேரத்தில் மகள் கார்த்திகா, தந்தைக்கு போன் செய்து கோவிலுக்கு வருமாறு அழைத்தார். இதனால் வீட்டை பூட்டி விட்டு ராமச்சந்திரன் கோவிலுக்கு சென்றார். பின்னர் ராமச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் சாமி கும்பிட்டு விட்டு, மீண்டும் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் வீட்டுக்குள் செல்வதற்காக பூட்டை திறந்த போது, திறக்கவில்லை. கதவின் உள்பக்கத்தில் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.

56 பவுன் நகை

இதனால் அதிர்ச்சியடைந்த ராமச்சந்திரன் பின்பக்க கதவு வழியாக வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, மற்றொரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் ஒரு அறையில் இருந்த 2 பீரோக்களில் பச்சை நிற இரும்பு பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த 56 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் திருட்டு போயிருந்தது. வீட்டின் மேல்பகுதியில் உள்ள ஓடுகளை பிரித்து, அதன் வழியாக வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் கதவினை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு கொண்டு இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ராமச்சந்திரன் ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் மலர் வரவழைக்கப்பட்டு, துப்பறியபட்டது. அப்போது அந்த நாய் சம்பவ இடத்தை மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மகள் திருமணத்திற்காக...

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளை போன நகைகள்-பணம் ராமச்சந்திரன் தனது மகளின் திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்தது என தெரியவந்தது.

மகள் திருமணத்திற்காக சேமித்த நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்று விட்டார்களே? இனிமேல் நகை-பணத்தை எப்படி சேமிப்பேன் என போலீசாரிடம் ராமச்சந்திரன் கண்கலங்கியது பரிதாபத்தை ஏற்படுத்தியது. 

Next Story