பள்ளிவாசலில் வெடிகுண்டு வெடிக்கும் மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு; போலீசார் விசாரணை


பள்ளிவாசலில் வெடிகுண்டு வெடிக்கும் மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு; போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 26 May 2019 3:45 AM IST (Updated: 26 May 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே பள்ளிவாசலில் வெடி குண்டு வெடிக்கும் என்ற மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொள்ளிடம்,

நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட தைக்கால் கிராமத்தில் காதிரியா பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசல் முகவரிக்கு கடந்த 19-ந்தேதி ஒரு கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தை தபால்காரர் அருகில் உள்ள பிரம்பு விற்பனை கடை முன்பு இருக்கும் தகவல் பெட்டியில் போட்டுவிட்டு சென்று விட்டார். அந்த கடிதத்தை நேற்று முன்தினம் இரவு ஜமாத் தலைவர் முகமது சுல்தான் எடுத்து பிரித்து பார்த்தபோது, அதில் தைக்கால் பள்ளிவாசலில் இந்த மாதம் இறுதியில் வெடிகுண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

விசாரணை

அந்த கடிதத்தை அனுப்பியவர் முகவரியில் ஆச்சாள்புரத்தை சேர்ந்த 2 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த கடிதத்தை ஜமாத் தலைவர் முகமது சுல்தான் கொள்ளிடம் போலீசில் ஒப்படைத்து, புகார் செய்தார். இந்த மிரட்டல் கடிதம் வதந்தியை பரப்புவதற்காக எழுதப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த கடிதத்தை அனுப்பிய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கொள்ளிடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story