“மகனை ஆசிட் ஊற்றி கொலை செய்துள்ளனர்” நடவடிக்கை எடுக்கவில்லை என்று போலீசார் மீது பெற்றோர் குற்றச்சாட்டு குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு


“மகனை ஆசிட் ஊற்றி கொலை செய்துள்ளனர்” நடவடிக்கை எடுக்கவில்லை என்று போலீசார் மீது பெற்றோர் குற்றச்சாட்டு குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு
x
தினத்தந்தி 28 May 2019 4:30 AM IST (Updated: 28 May 2019 12:37 AM IST)
t-max-icont-min-icon

தனது மகனை ஆசிட் ஊற்றி கொலை செய்துள்ளதாகவும், இதில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறைதீர் கூட்டத்தில் பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

ராமநாதபுரம்,

பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து நேற்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வழக்கம்போல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் வீரா£கவராவ் தலைமையில் மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர்.

கூட்டத்தில் கீழக்கரை அண்ணாநகரை சேர்ந்த முருகேசன் என்பவர் தனது மனைவி, மகள் மற்றும் உறவினர்களுடன் வந்து கண்ணீர் மல்க ஒரு மனுவை அளித்தனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

கபடி விளையாட்டு வீரரான எனது மகன் கார்த்திக் ராஜா (வயது 21) கடந்த மாதம் 22–ந்தேதி அதிகாலை நண்பர்கள் வந்து அழைத்ததால் டீ குடித்துவிட்டு வருவதாக மோட்டார் சைக்கிளில் சென்றான். ஆனால் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கீழக்கரை போலீசில் புகார் செய்ததால் செய்து வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலியல் மறுநாள் வாலிநோக்கம் கடற்கரையில் இறந்த நிலையில் எனது மகனி உடலை கண்டுஎடுத்தனர். உடல்அடையாளங்களை வைத்து எனது மகன் என்பதை உறுதி செய்தோம். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து ஒப்படைத்தனர்.

எனது மகனின் உடலில் காயங்கள் இருந்தன. அவன் எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், உடல் காயங்களின் அடிப்படையில் ஆசிட் ஊற்றி கொலை செய்திருக்கலாம் என்றும் கருதுகிறோம். இதில் உண்மை நிலையை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகன் இறந்ததற்கான முதல்தகவல் அறிக்கையும், பிரேத பரிசோதனை அறிக்கையும் இதுவரை வழங்கவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் வீரராகவராவ் இதுகுறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட காவல்துறை அலுவலக பணியாளரிடம் விளக்கம் கேட்டார். அதற்கு அவர் தெரியவில்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த கலெக்டர் வீரராகவராவ் பணியாளரை கண்டித்தார். மேலும், உடனடியாக பொறுப்பில் உள்ள அதிகாரியை வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ராமநாதபுரம் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ விரைந்து வந்து விளக்கம் அளித்தார். சம்பந்தப்பட்ட வழக்கு கடலோர காவல்குழும போலீஸ் நிலையத்தின் சார்பில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முதல்தகவல் அறிக்கையும், பிரேத பரிசோதனை அறிக்கையும் தயாராக உள்ளதாகவும், வாலிநோக்கம் போலீஸ் நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு உரிய விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அதுதொடர்பான ஆவணங்களை வழங்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். இதனால் அந்த வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story