தேர்தல் பறக்கும் படையினர் எனக்கூறி ரூ.20 லட்சம் கொள்ளை: நிதிநிறுவன ஊழியர்களே திருடியது அம்பலம், 2 பேர் கைது


தேர்தல் பறக்கும் படையினர் எனக்கூறி ரூ.20 லட்சம் கொள்ளை: நிதிநிறுவன ஊழியர்களே திருடியது அம்பலம், 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 May 2019 10:45 PM GMT (Updated: 28 May 2019 3:41 PM GMT)

மதுரையில் நிதி நிறுவன ஊழியர்களிடம் தேர்தல் பறக்கும் படையினர் எனக்கூறி ரூ.20 லட்சத்தை பறித்த வழக்கில், நிதிநிறுவன ஊழியர்களே திட்டமிட்டு திருடியது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக உதவி மேலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை,

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன்(வயது 24), ஆனந்தன் ஆகியோர் அங்குள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்தனர். அவர்கள் 2 பேரும் கடந்த 9–ந்தேதி மதுரையில் உள்ள நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் ரூ.20 லட்சத்தை செலுத்துவதற்காக அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.

அந்த பஸ் மதுரை வரிச்சியூர் பகுதியில் வந்த போது, தேர்தல் அவசரம் என்ற ஸ்டிக்கர் ஒட்டிய கார் ஒன்று அந்த பஸ்சை வழிமறித்து நின்றது. பின்னர் அந்த காரில் இருந்து இறங்கிய 4 பேர், தேர்தல் பறக்கும் படையினர் என்று கூறி பஸ்சில் ஏறினர். பின்னர் அவர்கள், நிதிநிறுவன ஊழியர்கள் வைத்திருந்த ரூ.20 லட்சத்தை நூதன முறையில் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து கருப்பாயூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் ஊமச்சிகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லு தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்து, தேர்தல் பறக்கும் படையினர் வந்த கார் குறித்து விசாரித்தனர். மேலும் சந்தேகத்தின் பேரில் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்களிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அந்த நிதி நிறுவனத்தில் வேலை செய்யும் நபர்களே திட்டமிட்டு பணத்தை கொள்ளையடித்து தெரியவந்தது. இதையடுத்து நிதிநிறுவன உதவி மேலாளராக பணிபுரியும் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த கதிரேசன்(வயது 32), மேலூரை சேர்ந்த ஊழியர் பாரதி(29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பணத்திற்கு ஆசைப்பட்டு அவர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்த ரூ.2 லட்சத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பாராட்டு தெரிவித்தார்.


Next Story