தடை காலம் முடிவடைய 2 வாரமே உள்ள நிலையில் ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் படகுகளை தயார் செய்து வரும் மீனவர்கள்
தடை காலம் முடிவடைய 2 வாரமே உள்ள நிலையில் ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் படகுகளுக்கு புதிய வர்ணம் அடித்து தயார் செய்யும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமேசுவரம்,
தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15–ந்தேதி முதல் மே மாதம் 29–ந்தேதி வரையிலும் மீன்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் பருவமாக உள்ளதால் இந்த 45 நாட்கள் மட்டும் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்ல மத்திய–மாநில அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளன. அது போல் இந்த தடை காலமானது கடந்த ஆண்டு முதல் 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டு அமலில் இருந்து வருகின்றது. அது போல் இந்த ஆண்டின் மீன்பிடி தடை காலமானது கடந்த ஏப்ரல் மாதம் 15–ந்தேதி தொடங்கி நடை பெற்று வருகின்றது. மீன்பிடி தடை காலம் நடந்து வருவதையொட்டி கடந்த ஏப்ரல் 15–ந்தேதியில் இருந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 2,000–ம் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் தடை காலத்தையொட்டி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதி மீனவர்கள் விசைப்படகுகளை கரையில் ஏற்றி வைத்து மராமத்து பணிகள் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விசைப்படகுகளுக்கான 61 நாள் மீன்பிடி தடை காலமானது வருகின்ற ஜூன் 14–ந்தேதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகிறது. தடைகாலம் முடிவடைய 2 வாரமே உள்ள நிலையில் ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் கரையில் ஏற்றி வைக்கப்பட்டு மராமத்து பணிகள் செய்து படகுகளுக்கு புதிதாக வர்ணம் அடித்தும் பதிவு எண்களை எழுதியும் படகுகளை கடலில் இறக்கும் பணியில் மீனவர்கள் ஆர்வத்துடன் ஈடுபட தொடங்கி விட்டனர்.
இதுபற்றி ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் சேசுராஜா கூறியதாவது:–
61 நாள் தடை காலத்தில் விப்படகு மீனவர் ஒவ்வொருவருக்கும் அரசால் ரூ.5,000 தடைகால நிவாரண தொகையாக வழங்கப்படும். ஆனால் தடைகாலம் முடிவடைய இன்னும் 2 வாரமே உள்ள நிலையில் இது வரையிலும் மீனவர்களுக்கு தடைகால நிவாரண தொகை வழங்கப்படாமல் இருந்து வருகிறது. தடைகாலத்தில் இந்த நிவாரண தொகை கொடுத்தால் தான் மீனவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மீன்துறையால் தடைகால நிவாரண தொகை தாமதமாகவே வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே தடை காலம் முடிவதற்குள் நிவாரண தொகை ரூ.5,000 மீனவர்களுக்கு வழங்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒட்டு மொத்த மீனவர்கள் சார்பில் கோரிக்கை விடுகின்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.