ரூ.20 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது - சென்னையை சேர்ந்தவர்


ரூ.20 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது - சென்னையை சேர்ந்தவர்
x
தினத்தந்தி 29 May 2019 3:45 AM IST (Updated: 28 May 2019 11:12 PM IST)
t-max-icont-min-icon

நிதி நிறுவனம் நடத்தி ரூ.20 கோடி மோசடி செய்த வழக்கில் சென்னையை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்,

வேலூரை சேர்ந்தவர் தியாகராஜன். இவரும் சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த நரசிம்மன் என்பவரும் வேலூர், சென்னை, விழுப்புரம், கடலூர், திருச்சி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிதி நிறுவனத்தை தொடங்கி, அதில் இருவரும் இயக்குனர்களாக இருந்தனர்.

மேலும் அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் இருந்து மாதம் மற்றும் வாரக்கணக்கில் பணம் வசூல் செய்து வந்தனர். ஆனால் அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பொதுமக்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. ரூ.20 கோடி வரை வசூல் செய்து கொண்டு இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

இதனால் ஏமாற்றம் அடைந்தவர்கள் வேலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வேலூரை சேர்ந்த தியாகராஜனை கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு கைது செய்தனர். சென்னையை சேர்ந்த நரசிம்மன் தலைமறைவாகி விட்டார்.

போலீசார் நடத்திய விசாரணையில் தியாகராஜனும், நரசிம்மனும் சேர்ந்து நடத்திய நிதி நிறுவனத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தைக் கொண்டு, நரசிம்மன் வேறு பெயரில் சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தது தெரிந்தது.

அதைத்தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு விஜயக்குமார் உத்தரவின்பேரிலும், துணை சூப்பிரண்டு நவநீதகிருஷ்ணன் மேற்பார்வையிலும், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சென்னை சென்று நரசிம்மனை கைது செய்தனர்.

Next Story