புதுவையில் பல்வேறு பகுதிகளில் மினி வேன்களை திருடிய 4 பேர் கைது
புதுவையில் பல்வேறு பகுதிகளில் மினிவேன்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மூலக்குளம்,
புதுவை சண்முகாபுரம் வி.வி.எஸ்.கார்டன் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 35). வேன் டிரைவர். இவருக்கு சொந்தமான வேனை கடந்த 21–ந்தேதி மேட்டுப்பாளையம் பிப்டிக் மெயின்ரோடு களம்காத்த மாரியம்மன் கோவில் அருகே நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது வேன் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் பெருமாள் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர்கள் இனியன், குமார் மற்றும் போலீசார் மேட்டுப்பாளையம் கனரக முனையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். டிரைவரிடம் ஆவணங்களை கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் டிரைவரை பிடித்து விசாரித்தனர். இதில் அரியாங்குப்பம் ஆர்.கே.நகரை சேர்ந்த ரமேஷ் (வயது 23) என்பதும், தனது நண்பர் அசோக் என்பவருடன் சேர்ந்து மேட்டுபாளையத்தில் வேனை திருடியதும் தெரியவந்தது.
இவர்கள் இருவரும் புதுவை பகுதிகளில் வேன், லாரிகளை திருடிக்கொண்டு கோவையை சேர்ந்த பிரபு மற்றும் உடுமலைபேட்டையை சேர்ந்த விமல் ஆகியோரிடம் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து மேட்டுப்பாளையம் போலீசார் கோவை சென்று பிரபுவையும், உடுமலைபேட்டைக்கு சென்று விமலையும் புதுச்சேரிக்கு கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து 2 மினி வேன்கள் உள்பட 4 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.