கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ‌ஷயான், மனோஜ் உள்பட 9 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ‌ஷயான், மனோஜ் உள்பட 9 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 3 Jun 2019 11:30 PM GMT (Updated: 3 Jun 2019 10:38 PM GMT)

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ‌ஷயான், மனோஜ் உள்பட 9 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017–ந் தேதி காவலாளி ஓம்பிரகாஷ் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுதொடர்பாக ‌ஷயான், மனோஜ், மனோஜ்சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

‌ஷயான், மனோஜ், திபு, பிஜின் ஆகிய 4 பேர் கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நேற்று கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு வந்தது. காலை 10.30 மணியளவில் மனோஜ்சாமி, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோஷ்சாமி, சம்சீர் அலி ஆகிய 5 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜரானார்கள். மாவட்ட நீதிபதி வடமலை நீதிமன்ற காவலில் உள்ள 4 பேரை போலீசார் ஆஜர்படுத்தும் வரை விசாரணையை தள்ளி வைத்தார்.

இதையடுத்து மதியம் 3 மணியளவில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கோவை மத்திய சிறையில் இருந்து ‌ஷயான், மனோஜ், திபு, பிஜின் ஆகிய 4 பேரை போலீசார் அழைத்து வந்து ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது ஜாமீனில் உள்ள 5 பேர் ஆஜரானார்கள். மற்றொரு வழக்கில் சதீசன் சிறையில் உள்ளதால், ஆஜராகவில்லை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட 10 பேரையும் விடுவிக்கக்கோரிய மனு மீதான வாதத்தை தொடங்க தயாராக உள்ளதாக அரசு வக்கீல் பாலநந்தகுமார் தெரிவித்தார்.

எதிர்தரப்பு வக்கீல்கள் ஆனந்த், ரவிச்சந்திரன் ஆகியோர் ஒருமுறை வாய்தா கொடுக்க வேண்டும் என்று கூறினர். அதனை தொடர்ந்து மாவட்ட நீதிபதி சதீசனை அடுத்த விசாரணையின்போது போலீசார் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை வருகிற 12–ந் தேதிக்கு தள்ளி வைத்தார். அதன்பின்னர் ‌ஷயான், மனோஜ் உள்பட 4 பேர் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


Next Story