ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: 12–ந் தேதி மனித சங்கிலி போராட்டம், காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் முடிவு


ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: 12–ந் தேதி மனித சங்கிலி போராட்டம், காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 9 Jun 2019 11:30 PM GMT (Updated: 9 Jun 2019 10:44 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவையில் வருகிற 12–ந் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புதுச்சேரி,

மத்திய அரசு தமிழகம் மற்றும் புதுவையில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேதாந்தா என்னும் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் விவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் புதுவை மாநிலத்தில் மட்டும் 116 இடங்களில் ஹைட்ரோ கார்பன் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக புதுவை தலைமை செயலாளருக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் புதுவை மாநிலத்தில் இதனை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக காங்கிரஸ், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி, துணை தலைவர் நீல.கங்காதரன், பி.கே. தேவதாஸ், தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நீல.கங்காதரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்மாநில குழு உறுப்பினர் பெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், ராஷ்டிரிய ஜனதா தள மாநில தலைவர் சஞ்சீவி, ம.தி.மு.க. செயலாளர் கபிரியேல் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவையில் நாளை மறுதினம் (புதன்கிழமை) மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பபட்டது.

கூட்டத்தில் முடிவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கடந்த 2017–ம் ஆண்டு மத்திய அரசு தமிழகம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் தொடர்பாக அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள மத்திய அரசு வேதாந்தா என்னும் தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக புதுவை சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பினர். அப்போது நான் புதுவை மாநிலத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள மாநில அரசு அனுமதி வழங்காது என்று கூறினேன். மேலும் இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கும், மத்திய பெட்ரோலிய துறை மந்திரிக்கும் அப்போதே கடிதம் எழுதினேன்.

இந்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 12–ந் தேதி தமிழகத்தில் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளனர்.

இதே போல் புதுவையிலும் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் வருகிற 12–ந் தேதி மாலை 5 மணி முதல் 6 மணி வரை மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டம் முத்தியால்பேட்டை மார்க்கெட்டில் இருந்து மறைமலைஅடிகள் சாலையில் உள்ள வெங்கடசுப்பாரெட்டியார் சிலை வரை நடைபெற உள்ளது.

போராட்டத்தில் கூட்டணி கட்சிகள் அனைவரும் கலந்து கொண்டு எழுச்சி பெறச் செய்ய வேண்டும். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம் நாளை(இன்று) விவசாயிகள், மீனவர்களை நேரடியாக சந்தித்து அவர்களையும் இந்த போராட்டத்தில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுப்பார். போராட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தெருமுனை பிரசாரம் மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுவையில் கடல்பகுதி மற்றும் நிலப்பகுதியில் 116 இடங்களில் ஹைட்ரோ கார்பன் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள அனுமதி அளித்து இருப்பதாக தலைமை செயலாளருக்கு மத்திய அரசிடம் இருந்து தகவல் வந்துள்ளது. எந்ததெந்த இடங்களில் என்று விளக்கமாக இன்னும் கடிதம் வரவில்லை. புதுவை மாநிலத்தில் இதனை செயல்படுத்த கூடாது என்று பிரமருக்கும், மத்திய பெட்ரோலிய துறை மந்திரிக்கும் கடிதம் எழுதி உள்ளேன். இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் மக்களோடு ஒருங்கிணைந்து பல கட்ட நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவை மாநிலத்தில் கொண்டு வர மாநில அரசு அனுமதிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story