14–ந் தேதியுடன் தடைக்காலம் நிறைவு: மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தயாராகி வரும் மீனவர்கள்
மீன்பிடி தடைக்காலம் வருகிற 14–ந் தேதியுடன் முடிவடைவதால் புதுவையில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர். இதையொட்டி தங்களது படகுகளை சீரமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
புதுச்சேரி,
புதுவை மாவட்டத்தில் காலாப்பட்டு, தேங்காய்த்திட்டு, வைத்திக்குப்பம், வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம், நரம்பை, பனித்திட்டு, குருசுகுப்பம் உள்பட 18 மீனவ கிராமங்களும், காரைக்கால் மாவட்டத்தில் மண்டபத்தூர் முதல் வடக்கு வாஞ்சூர் வரை 11 மீனவ கிராமங்களும் உள்ளன. இந்த மீனவ கிராமங்களில் இருந்து 500–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 2 ஆயிரம் பைபர் படகுகள், ஆயிரம் படகுகள், 100–க்கும் மேற்பட்ட பாய்மர படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகிறார்கள்.
புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் உள்பட மாநிலம் முழுவதும் மீன்பிடி தொழிலில் நேரடியாக 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்களும், மறைமுகமாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் மீன்கள் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15–ந் தேதி முதல் ஜூன் 14–ந் தேதி வரை 61 நாட்கள் ஆண்டு தோறும் மீன்பிடி தடைக்காலமாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அதன்படி கிழக்கு கடற்கரை பகுதிகளான தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் தற்போது மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த நாட்களில் படகுகளை சீரமைத்து வர்ணம் பூசுவது, சேதமடைந்த வலைகளை பராமரிப்பது போன்ற பணிகளில் மீனவர்கள் ஈடுபடுவதும் தடைக்காலம் முடிவடைந்ததும் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதும் வழக்கம். இந்த ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருகிறது. அதையொட்டி மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பழுது நீக்குதல், வர்ணங்கள் பூசுதல், வலைகளை சரி செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.
வருகிற 14–ந் தேதியுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவடைவதால் தேங்காய்திட்டு, வைத்திக்குப்பம், வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்று மீன் பிடிப்பதற்கு தயாராகி வருகிறார்கள். இதற்காக தங்களது படகுகள், வலைகளை சீரமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இதில் பெரும்பாலான மீன்பிடி விசைப்படகுகள் புதிதாக வர்ணம் பூசப்பட்டும், பழுது நீக்கப்பட்டும் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கின்றன. கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஆயத்தப்பணிகளில் இப்போதே மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறும்போது, ‘மீன்பிடி தடைக்காலம் முடிவடைய இருப்பதால் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வருகிற 13–ந் தேதி இரவே விசைப்படகுகளில் கடலுக்குள் செல்ல திட்டமிட்டுள்ளோம். மீன்பிடி தடைக்காலத்தில் அரசு சார்பில் நிவாரண தொகையாக மீனவ குடும்பத்திற்கு தலா ரூ.5,500 வழங்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. எனவே ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். வலை, கயிறு உள்ளிட்ட மீன்பிடி சாதனங்கள் அரசு சார்பில் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. ஆனால் பெரும்பாலும் அவை தரமானமாக இருப்பதில்லை. அதை தவிர்த்து தரமானதாக வழங்க வேண்டும்’ என்றார்.