மலேசியாவில் கொத்தடிமைகளாக உள்ளவர்களை மீட்கக்கோரி கலெக்டரிடம் மனு
மலேசியாவில் கொத்தடிமைகளாக உள்ளவர்களை மீட்கக்கோரி கலெக்டரிடம் மனுகொடுத்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் இந்திரா நகரை சேர்ந்த ராஜூ மகன் முருகன்(வயது 22). மற்றும் புல்லங்குடியை சேர்ந்த பாலுச்சாமி(39), அப்துல் மாலிக்(39) ஆகியோரிடம் தொருவளூரை சேர்ந்த காஜா மகன் ஹக்கீம்(39) என்பவர் தலா ரூ.70 ஆயிரம் பெற்றுக்கொண்டு கடந்த 2017–ம் ஆண்டு வேலை வாங்கி தருவதாக கூறி மலேசியா அழைத்துச்சென்றார். அங்கு ஒரு ஓட்டலில் வேலை பார்த்த 3 பேரும் சில மாதம் வீட்டிற்கு பணம் அனுப்பினர்.
அதன்பின்னர் பணம் அனுப்பவில்லையாம். இதுபற்றி கேட்டபோது ஓட்டல் நிர்வாகத்தினர் சம்பளம் தராமல் கொத்தடிமை போல அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாகவும், இந்தியாவிற்கு திரும்பி வர முடியாமல் பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டதாகவும் தெரிவித்தனராம்.
இதுகுறித்து முருகனின் தந்தை ராஜூ, பாலுச்சாமி மனைவி முனீசுவரி, அப்துல் மாலிக் மனைவி அனீஸ் பாத்திமா ஆகியோர் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் மலேசியாவில் கொத்தடிமையாக உள்ள நபர்களை மீட்டுத்தருமாறு தெரிவித்திருந்தனர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.