தண்ணீர் இன்றி கருகிய கரும்பு பயிர்கள் - மணலூர்பேட்டை பகுதி விவசாயிகள் கவலை


தண்ணீர் இன்றி கருகிய கரும்பு பயிர்கள் - மணலூர்பேட்டை பகுதி விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 10 Jun 2019 10:00 PM GMT (Updated: 10 Jun 2019 10:35 PM GMT)

மழை பொய்த்துப்போனதாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் தண்ணீர் இன்றி கரும்பு பயிர்கள் கருகியதால் மணலூர்பேட்டை பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருக்கோவிலூர், 

மணலூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் விவசாயத்தை முதன்மை தொழிலாக செய்து வருகின்றனர். இந்த பகுதியில் அதிகளவில் கரும்பு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடைக்கு பின் கரும்புகள், திருக்கோவிலூர் அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கும், மூங்கில்துறைப்பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும் விவசாயிகள் அனுப்பி வைப்பார்கள்.

வழக்கம்போல் இந்த ஆண்டும் மணலூர்பேட்டை, மேலந்தல், காங்கியனுார், ஜம்பை, அத்தியந்தல், தேவரடியார்குப்பம், முருக்கம்பாடி, கே.சி.தாங்கல், கொங்கனாமூர், பள்ளிச்சந்தல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிர் சாகுபடி செய்தனர்.

ஆனால் விவசாயிகள் எதிர்பார்த்தப்படி மழை பெய்யவில்லை. கடந்த 3 மாதமாக வெயிலும் சுட்டெரித்தது. இருப்பினும் நிலத்தடி நீரை மின்மோட்டார்கள் மூலம் உறிஞ்சி, கரும்பு பயிர்களுக்கு பாய்ச்சி வந்தனர். மழை பொய்த்துப்போனதாலும், வெயில் சுட்டெரித்ததாலும் நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக குறைந்தது. பெரும்பாலான கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் தண்ணீரின்றி வறண்டன.

நிலத்தடி நீர்மட்டமும் கைவிட்டதால் கரும்பு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவிக்கிறார்கள். தண்ணீர் இல்லாமல் கரும்பு பயிர்கள் கருகியுள்ளன. மேலும் பல கிராமங்களில் கருகி வருகின்றன. இதை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கால்நடைகளுக்கும் தீவனம் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் வேறு வழியின்றி கரும்பு பயிர் சாகுபடி செய்திருந்த வயலில் கால்நடைகளை மேய்ச்சலுக்காக விட்டுள்ளனர்.

இது குறித்து மேலந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், வங்கியில் நகைகள் மற்றும் விவசாய நிலத்தை அடகு வைத்து கடன் வாங்கி, கரும்பு பயிர் சாகுபடி செய்தோம். ஆரம்பத்தில் போதிய தண்ணீர் கிடைத்ததால் கரும்பு பயிர்கள் செழித்து வளர்ந்தன. ஆனால் மழை பெய்யாததாலும், வெயில் சுட்டெரித்ததாலும் பயிர்களுக்கு பாய்ச்ச தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் என் கண்முன்னே பயிர்கள் அனைத்தும் கருகியது. கரும்பு பயிர்களுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டு விட்டதே என்று நினைத்து, இதற்கு ஏதேனும் மாற்று வழி உண்டா? என்று வேளாண்மைத்துறை அதிகாரிகளை அணுகி கேட்டும் பலன் இல்லை.

வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் வங்கிகளில் வாங்கியிருந்த பயிர்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். காப்பீடு செய்துள்ள பயிர் களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என்றார். 

Next Story