பவானியில் போலீஸ்காரரை இரும்பு கம்பியால் தாக்கிய தொழிலாளி கைது


பவானியில் போலீஸ்காரரை இரும்பு கம்பியால் தாக்கிய தொழிலாளி கைது
x
தினத்தந்தி 12 Jun 2019 11:15 PM GMT (Updated: 12 Jun 2019 6:33 PM GMT)

பவானியில், போலீஸ்காரரை இரும்பு கம்பியால் தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள சனிச்சந்தை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜன். இவருடைய மகன் கார்த்தி (வயது 24). இவர் ஈரோடு ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு ஈரோட்டில் இருந்து வெள்ளித்திருப்பூர் நோக்கி ஒரு அரசு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். பஸ் பவானி பஸ் நிலையம் அருகே வந்தபோது அந்த பஸ்சில் வாலிபர் ஒருவர் ஏறினார். அந்த வாலிபர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர், பஸ் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டார். இதனை கவனித்த போலீஸ்காரர் கார்த்தி, தகராறில் ஈடுபட்டவரிடம், குடிபோதையில் பயணிகளிடம் ஏன் தகராறு செய்கிறாய்? என்று தட்டிக்கேட்டு உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால், கார்த்தியை சரமாரியாக தாக்கி உள்ளார். இதனால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனை கவனித்த பஸ்சில் இருந்த பயணிகள் சத்தம் போட்டனர். அதனால் பஸ் அங்கு நிறுத்தப்பட்டது. உடனே போலீசை தாக்கிய வாலிபர் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து பயணிகள், கார்த்தியை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆயுதப்படை போலீசை தாக்கிய வாலிபரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று வெள்ளித்திருப்பூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் ஒலகடம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து போலீசர் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர் ஒலகடம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான முகமது அலி ஜின்னா (26) என்பதும், இவர்தான் குடிபோதையில் பஸ்சில் பயணம் செய்ய பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டதோடு, ஆயுதப்படை போலீஸகாரர் கார்த்தியை இரும்பு கம்பியால் தாக்கியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், முகமது அலி ஜின்னாவை கைது செய்தனர். மேலும் பவானி கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story