மருத்துவ உபகரணங்கள் செயல்படுகின்றனவா? அரசு ஆஸ்பத்திரிகளில் ஆய்வு செய்ய 3 பேர் குழு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
அரசு ஆஸ்பத்திரிகளில் மருத்துவ உபகரணங்கள் செயல்படுவது குறித்து ஆய்வு செய்ய 3 பேர் குழுவை நியமித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
திருச்சியைச் சேர்ந்த மணிகண்டன், மதுரை ஐகோர்டடில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
கடந்த மாதம் 7–ந்தேதி மதுரையில் மின் தடை ஏற்பட்டது. இதனால் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 5 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். அந்த சமயத்தில் ஆஸ்பத்திரியில் இருந்த யு.பி.எஸ். பேட்டரிகள் இயங்காமல் இருந்துள்ளன. இவை ஒரு ஆண்டுக்கு முன்பு வாங்கப்பட்டவை.
இருப்பினும் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் பத்திரமாக வைத்துள்ளனர். இதனால் 5 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அரசு கட்டிடங்களை பராமரிக்கும் பொதுப்பணித்துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவு முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும் எலக்ட்ரிக்கல் என்ஜினீயர்களின் பணி முறையாக பயன்படுத்தப்படுவதில்லை.
அரசு ஆஸ்பத்திரிகளில் மருத்துவப் பணிகள் இடையூறு இல்லாமல் நடைபெற வேண்டும் என்பதற்காக பொதுப்பணித்துறையில் சென்னை, மதுரை, திருச்சி மண்டல அளவில் எலக்ட்ரிக்கல் பிரிவுக்கென தனியாக கண்காணிப்பு என்ஜினீயர் பணியிடம் 2011–ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
அரசு ஆஸ்பத்திரிகளில் எலக்ட்ரிக்கல் பணிகளுக்கான டெண்டர் விடுவது, பணிகளை மேற்பார்வையிடுவது உள்ளிட்ட அதிகாரங்கள் கண்காணிப்பு என்ஜினீயருக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 2018–ல் பொதுப்பணித்துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவு கண்காணிப்பு என்ஜினீயர் பணியிடம் நீக்கப்பட்டு, அந்தப்பதவியில் இருந்தவர்களை பொதுப்பணித்துறை நிர்வாகப்பிரிவில் இணைத்து இணை தலைமை என்ஜினீயராக நியமிக்கப்பட்டனர்.
அதிலிருந்து அரசு ஆஸ்பத்திரிகளில் மின்னணு சாதனங்கள் சரியாக ஆய்வு செய்யப்படுவதில்லை.
மதுரையில் நடைபெற்ற சம்பவம் போல எதிர்காலத்தில் பிற அரசு ஆஸ்பத்திரிகளில் நடைபெறாமல் தடுக்க நோயாளிகளின் நலனுக்காக பொதுப்பணித்துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவுக்கு தனி கண்காணிப்பு என்ஜினீயர் பணியிடத்தை ஏற்படுத்தி, அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் மின்னணு சாதனங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யவும், அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
5 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே குருசங்கர், வெர்ணிகாமேரி சார்பில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருந்தது.
இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
முடிவில், இதுதொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற அரசு டாக்டர் சோமசுந்தரம், வக்கீல்கள் செந்தில், சுப்புராஜ் ஆகியோரைக் கொண்ட சிறப்புக்குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த குழு மதுரை ஐகோர்ட்டு எல்லைக்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் ஏதேனும் சில அரசு ஆஸ்பத்திரிகளில் திடீரென சென்று செயற்கை சுவாசம், ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள், உபகரணங்கள் உள்ளனவா? அவை செயல்பாட்டில் உள்ளனவா? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த குழு ஆய்வுக்கு செல்வதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பாக சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவித்தால் போதும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.