சினிமா பாணியில் திருமணம் செய்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
திருப்பத்தூரில் அலைபாயுதே சினிமா பாணியில் திருமணம் செய்த காதல் ஜோடி, பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர்.
வேலூர்,
அலைபாயுதே படத்தில் மாதவனும், ஷாலினியும் ரகசிய திருமணம் செய்துகொண்டு அதை மறைத்து, தங்கள் பெற்றோருடன் வசிப்பார்கள். அதே பாணியில் திருப்பத்தூரில் திருமணம் செய்த காதல் ஜோடியினர் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:–
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் கஜேந்திரன். இவருடைய மகன் கவுதம் (வயது25). தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அதேப்பகுதியை சேர்ந்த கருணாகரன் என்பவரின் மகள் சரண்யா (23). எம்.பி.ஏ. பட்டதாரி.
இவர்களுடைய வீடுகள் ஒரே பகுதியில் இருப்பதால் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் 7 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2018–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இருவரும், தங்கள் பெற்றோருக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் திருமணம் செய்ததை வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவரவர் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டனர். திருமணம் செய்ததை பெற்றோருக்கு தெரியாமலேயே சரண்யா அவருடைய பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சரண்யாவுக்கு அவருடைய பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதை அறிந்த சரண்யா, கடந்த 17–ந்தேதி காதல் கணவர் கவுதம் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சரண்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, கவுதம், சரண்யா இருவரும் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று மனு கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.