அண்ணாமலை பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களை மாற்றம் செய்ய தடை கோரி வழக்கு; மதுரை ஐகோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உபரியாக உள்ள ஆசிரியர்களை இதர கல்லூரிகளுக்கு மாற்றம் செய்யும் உத்தரவுக்கு தடை கோரிய வழக்கில், உயர்கல்வித்துறை முதன்மை செயலர், கல்லூரி கல்வி இயக்குனர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
நெட், ஸ்லெட் சங்க பொதுச்செயலாளர் தங்க முனியாண்டி, மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
முதுகலை பட்டதாரியான நான், பி.எச்.டி பட்டம் பெற்றுள்ளேன். தேசிய தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற்றுள்ளேன். உதவி பேராசிரியர் பணிக்கு முழு தகுதி உள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட, ஆசிரியர் அல்லாத பணியிடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
அதே நேரம் குறைவான மாணவர் சேர்க்கை இருந்தாலும், ஆண்டுதோறும் நியமிக்கப்படும் ஆசிரியர் பணியிடங்கள் மட்டும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்த பணி நியமனங்கள் அனைத்தும் தேவையான அளவைவிட கூடுதலாக உபரியாகவே இருந்தன.
இந்த நியமனங்கள் அனைத்தும் சட்டவிரோதமானவை. அதிக அளவு பணம் பெற்றுக் கொண்டு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டது. முறைகேடு புகார் காரணமாக பல்கலைக்கழகத்தை அரசு ஏற்றது. 860 ஆசிரியர் பணியிடங்கள் போதுமான நிலையில், சுமார் 3,896 பேர் வரை நியமிக்கப்பட்டு இருந்தனர்.
உபரியாக இருந்தவர்களில் சுமார் 370 பேர் பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு உதவி பேராசிரியர்களாக 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டனர். கடந்த பிப்ரவரி 12–ந்தேதி மேலும் 87 பேர் பல்வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதேபோல் பலரது ஒப்பந்தத்தை மேலும் 3 ஆண்டுக்கு நீட்டித்துள்ளனர். இதனால், என்னைப் போன்ற பலரது வாய்ப்புகள் பறிபோகிறது.
நியமன முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்பு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், முறைகேடாக நியமனம் செய்யப்பட்டவர்களை மேலும் காப்பாற்றும் வகையில் இதர கல்லூரிகளுக்கு மாற்றுகின்றனர். இவர்களில் போதிய தகுதி இல்லாதவர்கள் பலர் உள்ளனர். இந்த நியமனம் மற்றும் மாறுதல்கள் யூ.ஜி.சி. விதிக்கு எதிரானது.
எனவே, பல்கலைக்கழகத்தில் உபரியாக உள்ள ஆசிரியர்களை இதர கல்லூரிகளுக்கு மாற்றம் செய்யும் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். முறைகேடாக நியமனம் பெற்றவர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றியது குறித்தும், இவர்களது ஒப்பந்தத்தை நீட்டித்தது குறித்தும் நிர்வாக சீர்திருத்த ஆணையர், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் ஆகியோர் விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், புகழேந்தி ஆகியோர், மனு குறித்து உயர்கல்வித்துறை முதன்மை செயலர், கல்லூரி கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனர், நிர்வாக சீர்திருத்த ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 22–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.