குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.2 கோடியில் திட்ட பணிகள் கலெக்டர் சாந்தா தகவல்


குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.2 கோடியில் திட்ட பணிகள் கலெக்டர் சாந்தா தகவல்
x
தினத்தந்தி 24 Jun 2019 10:30 PM GMT (Updated: 24 Jun 2019 7:55 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டினை சமாளிக்க ரூ.2 கோடியில் திட்ட பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூரில் மாவட்ட ஊராட்சி திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 97 ஆயிரத்தில் காந்திநகர் எதிர்புறம் நொச்சிகுட்டை அருகில் பொது கிணறு அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். நகர் விளாங்குட்டை அருகில் உள்ள பொது கிணற்றுக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. அதைப்போல் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் ரூ.5 லட்சத்தில் கல்பாடி ஊராட்சியில் குடிநீருக்கு ஆதாரமாக உள்ள சறுக்குபாலம் அருகில் உள்ள கிணற்றில் ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

ஆலத்தூர் ஒன்றியம் பாடாலூர் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர்த்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இரூரில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 97 ஆயிரத்தில் சமுதாய கிணறு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சமுதாய கிணற்றிலிருந்து 280 மீட்டர் குழாய் அமைத்து குடிநீர் வழங்க ஊராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தையும் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் ஆய்வு செய்தார்.

ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

அப்போது அவர் கூறுகையில், பெரம்பலூர் நகராட்சியில் வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் 3 திறந்த வெளி கிணறுகள் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டினை சமாளிக்க ரூ.2 கோடியில் புதிய குடிநீர் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே பொதுமக்கள் அனைவரும் கோடைகாலத்தில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வினியோகிக்கப்படும் குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்தி குடிநீர் தட்டுப்பாட்டினை தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் குடிநீர் வினியோகம் தேவைப்படும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் தங்களது கோரிக்கையை தெரிவிக்கும் பட்சத்தில் கோரிக்கை மீது விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

உணவு தானியக்கிடங்கு

பின்னர் பெரம்பலூர் எம்.ஜி.ஆர். நகரில் மாவட்ட வளர்ச்சித்துறை வாயிலாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உணவு தானியக்கிடங்கு பணியை கலெக்டர் சாந்தா பார்வையிட்டார். இந்த ஆய்வுகளின்போது ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சீனிவாசன், உதவி இயக்குனர் (ஊராட்சி) மகாலிங்கம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆலயமணி, லட்சுமி, மணிவாசகம், பணி மேற்பார்வையாளர் சந்திரசேகரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story