சுருக்கு வலைக்கு தடை; அமைச்சர் தலைமையில் ஆலோசனை, மீனவர்களுக்கு இடையே மோதல்
சுருக்கு வலை தடை தொடர்பாக அமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மீனவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி,
சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் மீன்வளம் பாதிக்கப்படுவதாகவும், இதனால் சுருக்கு வலைக்கு தடைவிதிக்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவினை மாநிலங்கள் செயல்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்த உத்தரவினை புதுவையை அடுத்த தமிழக பகுதிகளில் அதிகாரிகள் கடுமையாக அமல்படுத்தி வருகின்றனர். புதுவை கடல் எல்லையைதாண்டி பிற மாநில கடல் எல்லைக்குள் சென்று மீன்பிடிக்கும் மீனவர்களின் வலையையும் பறிமுதல் செய்து வருகின்றனர். உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தியும் வலையை திரும்பத் தர மறுத்து வருகிறார்கள்.
எனவே சுருக்கு வலை தொடர்பாக மீனவர்களுடன் பேசி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், ஜெயமூர்த்தி, தனவேலு, கலெக்டர்கள் அருண் (புதுவை), விக்ராந்த் ராஜா (காரைக்கால்), சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வகுப்தா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் பேசுகையில், ‘கடல் வளம் பாதிக்கப்படுவதால் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் தடை செய்யும் நிலையில் புதுவையிலும் சுருக்கு வலையை பயன்படுத்த தடை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது’ என்று தெரிவித்தார்.
அப்போது பேசிய மீனவர்கள் சிலர் தற்போதுதான் அதிக விலை கொடுத்து வலை வாங்கி தொழில் செய்வதாகவும், தற்போது தடை என்று அறிவித்தால் என்ன செய்வது என்றும் கேள்வி எழுப்பினார்கள்.
இதனால் மீனவர்களுக்கு இடையே தகராறு ஏற்படும் நிலை உருவானது. இந்த பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போது அங்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி வந்தார். அப்போது அவர் நிலைமையை அறிந்து இருதரப்பு மீனவர்களின் கருத்தையும் கேட்டுக்கொண்டு விரைவில் இறுதி முடிவு எடுக்கலாம் என்றுகூறி அவர்களை அனுப்பி வைத்தார்.
இதனிடையே பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த இருதரப்பு மீனவர்கள் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த அன்பழகன் எம்.எல்.ஏ. மற்றும் போலீஸ் அதிகாரிகள் அவர்களிடம் பேசி கலைந்து போக செய்தனர்.