மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது; 9 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது; 9 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 27 Jun 2019 4:00 AM IST (Updated: 27 Jun 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். 9 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரி,

புதுச்சேரி நகரப் பகுதியில் சமீப காலமாக மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவதாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தாவுக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருடர்களை பிடிக்க போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்–இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், உதவி சப்–இன்ஸ்பெக்டர் வெங்கடசலபதி மற்றும் போலீசார் இது குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

புதுச்சேரி–கடலூர் சாலையில் கண்காணிப்பு பணியின்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.

இதனால் மேலும் சந்தேகம் அடைந்து 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று போலீசார் விசாரித்தனர். இதில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி முத்தாம்பாளையத்தை சேர்ந்த பானிபூரி வியாபாரி ராஜ்குமார் (வயது 25), மெக்கானிக் சதீஷ்குமார் (22) என்பது தெரியவந்தது.

இவர்கள் 2 பேரும் புதுச்சேரி உருளையன்பேட்டை போலீஸ் சரக பகுதியில் 6 மோட்டார் சைக்கிள்கள், பெரியகடை போலீஸ் சரக பகுதியில் 3 மோட்டார் சைக்கிள்களை திருடியதாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தெரிவித்த தகவலின்படி பதுக்கி வைத்து இருந்த 9 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட உருளையன்பேட்டை போலீஸ்காரர்கள் சத்தியவேல், பிரேம்குமார் ஆகியோரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வகுப்தா, போலீஸ் சூப்பிரண்டு (கிழக்கு) மாறன் ஆகியோர் பாராட்டினார்கள்.


Next Story