ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் வீடுகளை இடிக்கக்கூடாது மாநகராட்சி அதிகாரியிடம் கோரிக்கை


ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் வீடுகளை இடிக்கக்கூடாது மாநகராட்சி அதிகாரியிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 2 July 2019 10:45 PM GMT (Updated: 2 July 2019 7:15 PM GMT)

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் வீடுகளை இடிக்கக்கூடாது என மாநகராட்சி அதிகாரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை சீனிவாசபுரம் முதல் தென்கீழ்அலங்கம் வரை அகழி உள்ளது. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் அகழியை தூர்வாரி, அகழி கரையில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்காக செக்கடி, மேலஅலங்கம், வடக்கு அலங்கம் உள்ளிட்ட பகுதிகளில் அகழிகரையில் கட்டப்பட்ட வீடுகளை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் முட்டிபோட்டு சென்று மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கும் நூதன போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மனு அளித்தனர்

அதன்படி நேற்றுகாலை தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்க தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் சிலர், முட்டிபோட்டு சென்று மனு அளிக்க தயாராக இருந்தனர். அப்போது அவர்களை அழைத்து பேசிய போலீசார், நீங்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தினால் கைது செய்து சிறையில் அடைத்துவிடுவோம் என கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாநகராட்சி மேலாளர் கிளமெண்ட்டை நேரில் சந்தித்து தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தினர் மனு அளித்தனர். அதில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் வீடுகளை இடிப்பதை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

Next Story