அரக்கோணம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
அரக்கோணம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டதால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
அரக்கோணம்,
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.
இதற்காக இந்த கார்கள் அரக்கோணம் அருகே உள்ள மேல்பாக்கம் ரெயில்நிலைய யார்டு பகுதிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்கிருந்து அவை சரக்கு ரெயில்களில் ஏற்றப்பட்டு அனுப்பப்படுகின்றன.
இந்த நிலையில் நேற்று காட்பாடியில் இருந்து மேல்பாக்கத்தில் உள்ள யார்டு பகுதிக்கு கார்களை ஏற்றிச்செல்ல 25 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் சென்று கொண்டிருந்தது.
மேல்பாக்கம் அருகே மெயின் லைனில் இருந்து லூப் லைனில் ரெயில் சென்று கொண்டிருந்த போது ரெயிலில் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்டது. உடனே என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்துவதற்கு பிரேக்கை இயக்கினார். ரெயிலின் வேகம் குறைந்து நிற்பதற்குள் 3 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த நேரத்தில் அந்த வழியாக வந்த பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் சங்கமித்ரா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில், கோவையில் இருந்து சென்னை செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் ரெயில் நிலைய மேலாளர் ராதாகிருஷ்ணன், ரெயில் கட்டுப்பாட்டு அலுவலர் ரகு மற்றும் ரெயில்வே ஊழியர்கள், சிப்பந்திகள் 50–க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்காக அரக்கோணத்தில் இருந்து ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டது. அதன் மூலம் தடம் புரண்ட ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த சரக்கு ரெயில் லூப்லைனில் நிறுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து நடுவழியில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு சென்றது.
இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பச்சையம்மாள், சப்–இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு, ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.