பண்ணாரி சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை; கணக்கில் வராத ரூ.66 ஆயிரம் பறிமுதல்


பண்ணாரி சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை; கணக்கில் வராத ரூ.66 ஆயிரம் பறிமுதல்
x
தினத்தந்தி 20 July 2019 4:15 AM IST (Updated: 20 July 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

பண்ணாரி சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.66 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரியில் போக்குவரத்து போலீஸ் சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடி இரவு–பகல் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.

இங்கு வேலை பார்க்கும் போலீசார் பண்ணாரியில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக கர்நாடகா செல்லும் வாகனங்களையும், அங்கிருந்து வரும் வாகனங்களுக்கும் உரிய உரிமம் உள்ளதா?, எடை அதிகமாக உள்ளதா?, அதிக உயரத்தில் பாரம் ஏற்றிக்கொண்டு வருகிறதா? என்று சோதனை செய்வார்கள். அவ்வாறு விதிமுறை மீறி வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பார்கள்.

நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுலோசனாவும், மாதேஸ் என்ற போலீஸ்காரரும் பணியில் இருந்தார்கள். இந்தநிலையில் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் 3 கார்கள் சோதனை சாவடி முன்பு வந்து நின்றது. அதில் இருந்து லுங்கி அணிந்திருந்த 10 பேர் சோதனை சாவடிக்குள் திடீர் என்று நுழைந்து சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போதுதான் வந்தவர்கள் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் கருணாகரன் மற்றும் போலீசார் என சோதனை சாவடியில் பணியில் இருந்தவர்களுக்கு தெரிந்தது.

சோதனையின்போது சோதனை சாவடிக்குள் இருந்த அட்டை பெட்டிகளை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பார்த்தார்கள். அதில் ரப்பர் சுற்றுப்பட்டு பல நோட்டு கட்டுகள் இருந்தன. மொத்தம் ரூ.66 ஆயிரம் இருந்தது. இந்த பணத்துக்கு சோதனை சாவடியில் இருந்தவர்களால் கணக்கு காட்டமுடியவில்லை. மேலும் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட வாகன ஓட்டிகளிடம் அதிகம் வசூல் செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கணக்கில் காட்டப்படாத ரூ.66 ஆயிரத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இதுகுறித்து சோதனை சாவடியில் பணியாற்றும் அனைவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போக்குவரத்து போலீஸ் சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தியதும், அதில் ரூ.66 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதும் பண்ணாரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story