குடியாத்தம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரூ.4 லட்சம் பறிமுதல் வாகன சோதனையில் சிக்கியது
குடியாத்தம் அருகே நடந்த வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்று எடுத்துச்செல்லப்பட்ட ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
குடியாத்தம்,
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வருகிற 5–ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலையில் குடியாத்தம் – வேலூர் சாலையில் வேப்பூர் பகுதியில் நிலை கண்காணிப்பு குழுவை சேர்ந்த வேளாண்மை அதிகாரி சாமிநாதன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, 89 ஆயிரத்து 500 ரூபாய் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து மினி லாரியில் இருந்தவரிடம் விசாரணை நடத்தியதில், அரக்கோணம் பகுதியை சேர்ந்த யுனூஸ் என்பதும், ஆந்திர மாநிலத்திற்கு சென்று தக்காளி வாங்க பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது. ஆனால் பணத்திற்கு உண்டான ஆவணங்கள் இல்லாததால் பணத்தை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் பறக்கும் படையை சேர்ந்த வேல்முருகன் தலைமையில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி மற்றும் போலீசார் சித்தூர் சாலையில் பாக்கம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்ட போது ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் கொண்டு சென்றது தெரியவந்தது.
பின்னர் லாரியில் வந்த கரூர் வெள்ளியனை பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரிடம் விசாரணை செய்த போது கரூரில் இருந்து பிளாஸ்டிக் நாற்காலிகளை குடியாத்தத்தை அடுத்த பரதராமியில் இறக்கிவிட்டு, அதற்கான பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்தார். இருப்பினும் பணத்திற்கு உண்டான உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட 3 லட்சத்து 99 ஆயிரத்து 500 ரூபாய் குடியாத்தம் தாசில்தார் டி.பி.சாந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.