திருவையாறு அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி கர்ப்பிணி சாவு


திருவையாறு அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி கர்ப்பிணி சாவு
x
தினத்தந்தி 25 July 2019 10:15 PM GMT (Updated: 25 July 2019 6:46 PM GMT)

திருவையாறு அருகே மின்சாரம் தாக்கி கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார்.

திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள முல்லைக்குடி ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் இளையராஜா. இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இவருடைய மனைவி யோகா(வயது 30). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் யோகா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். 5 மாத கர்ப்பிணியாக இருந்த அவர், கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருவையாறு பங்களா தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று இருந்தார்.

மின்சாரம் தாக்கி சாவு

அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று யோகா தனது தந்தை காமராஜ், தம்பிகள் விஜயகாந்த், விஜயகுமார் ஆகியோருடன் கான்கிரீட் தூண் கட்டுவதற்காக கம்பியை தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த கம்பி, உயரே செல்லும் மின் கம்பியில் உரசி, யோகா உள்பட 4 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இதையடுத்து அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவையாறு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது சிகிச்சை பலனின்றி யோகா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மின்சாரம் தாக்கி கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story