மார்த்தாண்டத்தில் வாக்குச்சீட்டுகள் எரிப்பு: கூட்டுறவு சங்க ஊழியர் கைது


மார்த்தாண்டத்தில் வாக்குச்சீட்டுகள் எரிப்பு: கூட்டுறவு சங்க ஊழியர் கைது
x
தினத்தந்தி 25 July 2019 11:15 PM GMT (Updated: 25 July 2019 9:00 PM GMT)

மார்த்தாண்டம் கூட்டுறவு சங்க தேர்தல் வாக்குச்சீட்டு எரித்த வழக்கில் இளநிலை உதவியாளரை போலீசார் கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய சங்க முன்னாள் தலைவர் உள்பட 6 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

குழித்துறை,

மார்த்தாண்டம் வெட்டுமணியில் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் உள்ளது. மார்த்தாண்டம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த தேனீ வளர்ப்போர் உற்பத்தி செய்யும் தேனை இந்த சங்கம் மூலம் கொள்முதல் செய்து சுத்திகரித்து மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்து வருகிறது.

இந்த கூட்டுறவு சங்கத்தில் தேனீ வளர்ப்போர் பலர் உறுப்பினராக உள்ளனர். இந்த சங்கத்தில் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஆண்டு நடந்தது.

வாக்குச்சீட்டுகள் எரிப்பு

தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த 2 அணிகள், தி.மு.க. அணி என 3 அணிகள் வேட்புமனு தாக்கல் செய்தன. அதில், சிலரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டியை மார்த்தாண்டத்தில் உள்ள தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டது. பின்னர், அந்த அறைக்கு ‘சீல்‘ வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே முன்னாள் தலைவர் ஒருவரின் அணி சார்பில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை கேட்டு தொடர்ந்த வழக்கில், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வாக்குகள் எண்ணப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி வாக்கு எண்ணிக்கையை நடத்தலாம் என கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி வாக்குகள் எண்ணுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் கடந்த 20-ந் தேதி நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்க காவலாளியை கட்டிப்போட்டு வாக்குச்சீட்டுகளை தீ வைத்து எரித்து விட்டனர்.

இளநிலை உதவியாளர் கைது

இதுகுறித்து கூட்டுறவு சங்க செயலாளர் நல்லதம்பி மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை உதவியுடன் பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தார்.

அப்போது, தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்க இளநிலை உதவியாளர் சாம் கிறிஸ்டோபர் தாசுக்கு (வயது 52) தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பரபரப்பான தகவல்கள் வெளியானது.

கூலிப்படை

கைது செய்யப்பட்ட சாம் கிறிஸ்டோபர் தாஸ், மார்த்தாண்டம் அருகே உள்ள முன்சிறையை சேர்ந்தவர். அவரது தந்தை கூட்டுறவு சங்கத்தில் வேலை பார்த்த போது, இறந்ததால் வாரிசு அடிப்படையில் அவருக்கு அங்கு வேலை கிடைத்துள்ளது. மேலும், கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவரான குழித்துறை மானஸ் என்பவருடன் சேர்ந்து அவர் பண மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

இந்தநிலையில் சாம் கிறிஸ்டோபர் தாஸ், களியக்காவிளையை சேர்ந்த கிறிஸ்துராஜூ ஆகியோருடன் முன்னாள் சங்க தலைவர் மானஸ் சங்க தேர்தல் தொடர்பாக பேசியுள்ளார். அப்போது மாற்று அணியினர் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதால், வாக்குச்சீட்டுகளை எரிக்க வேண்டும் என்றும், அதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். பின்னர் அவர்கள் 4 பேர் கொண்ட கூலிப்படையை ஏவி வாக்குச்சீட்டுகளை எரித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

முன்னாள் தலைவருக்கு வலைவீச்சு

மேலும் இதுதொடர்பாக சங்க முன்னாள் தலைவர் மானஸ், கிறிஸ்துராஜ், கூலிப்படையினர் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர். தேர்தலில் தோற்று விடுவோம் என பயந்த முன்னாள் சங்க தலைவர், கூலிப்படையை ஏவி வாக்குச்சீட்டுகளை எரித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Next Story