நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தகவல்


நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தகவல்
x
தினத்தந்தி 31 July 2019 5:16 AM IST (Updated: 31 July 2019 5:16 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறினார்.

நாமக்கல்,

தமிழக அரசு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் பிறந்தநாளை மருத்துவமனை தினமாக கொண்டாட அறிவுறுத்தி உள்ளது. அதன்படி நேற்று நாமக்கல் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் மருத்துவமனை தினவிழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு நலப்பணிகள் இணை இயக்குனர் தேன்மொழி தலைமை தாங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) கண்ணப்பன் வரவேற்று பேசினார். இதில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்களை கவுரவித்தும், மருத்துவமனை தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி நபர்களுக்கு பரிசுகள் வழங்கியும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த விழாவில் சிறப்பாக பணியாற்றிய நபர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அத்துடன் சான்றிதழ் வழங்கி இருந்தால் நன்றாக இருக்கும். நாங்கள் காவல்துறையில் நற்செயல் புரிவோருக்கு மாதந்தோறும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்து வருகிறோம். இதேபோல் இந்த ஆஸ்பத்திரியில் எத்தனையோ நல்ல விஷயங்கள் நடைபெறும். அதை ஒரு போர்டு அமைத்து எழுதி வைத்தால், சம்பந்தப்பட்ட நபர்களை ஊக்குவிக்கும் வகையில் அமையும். மேலும் நற்செயல்கள் அதிகரிக்கும்.

இதேபோல் நன்கொடையாளர்கள் பலர் உள்ளனர். அவர்களை நாம் பயன்படுத்தி உள்ளோம். அந்தவகையில் நான், அரிமா சங்கம் மூலம் இந்த மருத்துவமனையில் 8 கண்காணிப்பு கேமராக்களை அமைக்க நடவடிக்கை எடுத்து உள்ளேன். இந்த கேமராக்கள் மருத்துவமனைக்கு முன்புறம் மற்றும் வளாகத்தில் நடைபெறும் காட்சிகளை படம் பிடிக்கும் வகையில் விரைவில் அமைக்கப்பட உள்ளது. இது காவல்துறைக்கும் பயன் உள்ளதாக இருக்கும். டாக்டர் மற்றும் ஆசிரியர் ஆகிய இருபணிகளும் குறைகள் சொல்ல முடியாத பணியாகும். இதர பணிகளில் குறைகளை கண்டுபிடிக்க முடியும். எனவே இந்த பணிகளை இறைபணி என்றே சொல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விருது மற்றும் பரிசுகளை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.

மேலும் ஆஸ்பத்திரி வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சி அரங்கை திறந்து வைத்து பார்வையிட்டார். மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) செல்வக்குமார், நிர்வாக அலுவலர் டாக்டர் சதீஷ்குமார் மற்றும் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story